“நாளைக்கு உங்களுக்கும் கொலை மிரட்டல் வரலாம்”.. கேள்வி கேட்ட செய்தியாளரை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி
கோவை: இன்றைக்கு எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது, நாளை உங்களுக்கும் வரும், தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.. என செய்தியாளரிடம் கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "ஒரு பொம்மை முதல்வர் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார். திறமையற்ற முதலமைச்சர் இதை ஆண்டு கொண்டு இருக்கிறார். அதனால் சட்டம் - ஒழுங்கு மிக, மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு இருக்கிறது. இது தான் நாடறிந்த உண்மை.
அரக்கோணத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கூறுகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அந்தப் பெண் கொடுத்த புகாரை அப்போதே எஃப்.ஐ.ஆர் ஆக பதிவு செய்து இருக்க வேண்டும். அந்த பெண் ஏழாம் தேதி புகார் கொடுத்து இருக்கிறார். அதை பத்தாம் தேதி தான் புகாராக பதிவு செய்கிறார்கள். அந்த புகார் தெய்வச் செயல் என்பவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அவர் நீதிமன்றத்தை அணுகுகிறார், அவருக்கு உடனே ஜாமீன் கிடைத்து விட்டது.
அரக்கோணம் சம்பவம்
அந்தப் பெண் கொடுத்த புகாரை ஊடகம், பத்திரிகை என அனைத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள். போலீசார் இந்த புகாரை ஒரு போதும் வெளியிட கூடாது. ஆனால் அந்தப் பெண் கொடுத்த புகாரை அப்படியே ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் வெளியிட்டு இருப்பதாக பேட்டி கொடுத்து இருக்கிறார். தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆளுநரிடம் தெரிவிப்பதற்காக சென்னைக்கு சென்று உள்ளார். அங்கு இருக்கும் போலீசாருக்கு இது தெரிய வர ஆளுநரை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த பெண்ணையும் அவரது தாயாரையும் ஆட்டோவில் ஏற்றி வெளியே அனுப்பி விடுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண் எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என கூறி இருக்கிறார். அந்தப் பெண் மிகுந்த அச்சத்தோடு தன்னுடைய கொடுமையை ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டு இருப்பதற்கு அரக்கோணமே சாட்சி.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு
அதேபோல கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில், ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து உள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை, காவல்துறையே வெளியிடுகிறது. குற்றவாளிகள் இதில் முன் ஜாமீன் பெறுவதற்கு காவல் துறையே உதவி செய்கிறது. அதே போல இது சாதாரண குற்ற வழக்காக பதிவு செய்யப்படுகிறது. இதை கண்டித்து அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்.
அதேபோல இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஒரு காப்பகத்தில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடித்து துன்புறுத்தி கொலை செய்து இருக்கிறார். இந்த செய்தியாக வெளிவந்து இருக்கிறது. இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. இனியாவது இந்த அரசு விழிப்போடு இருந்து மக்களை பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
இன்று எஸ்பி வேலுமணிக்கு.. நாளை உங்களுக்கும்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்து இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "தற்போது அவருக்கு வந்து இருக்கிறது. நாளை உங்களுக்கும் கூட வரலாம். இந்த ஆட்சியில் தான் பாதுகாப்பே இல்லையே.. அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள். இந்த ஆட்சியில் அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்தமாக நாட்டுக்கே பாதுகாப்பு இல்லை, இந்த ஆட்சி இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான நிலைக்குப் போய்விடும். எங்கு பார்த்தாலும் போதை கஞ்சா அடித்து விட்டு என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் செய்கிறார்கள்.
முதலில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். போதைப்பொருட்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். நான் சொல்வதை அரசு செவி கொடுத்து கேட்டு இருந்தால், அப்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வந்து இருக்காது. போதைக்கு அடிமையானவர்கள் இது போன்ற தவறான வழிகளில் சென்று கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை போன்றவைகளை செய்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி வேலுமணிக்கு வந்த மர்ம கடிதம்
எஸ்.பி.வேலுமணி இல்லத்திற்கு அண்மையில் ஒரு கடிதம் வந்தது. அதில் அனுப்பியவரின் பெயர், முகவரி இல்லை. அந்த கடிதத்தில், ஜூலை 30-ஆம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. நாங்கள் உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் உள்ளனர். காவல்துறையிலும் எங்கள் ஆட்கள் உள்ளனர். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். உங்களிடம் நிறைய கறுப்பு பணம் உள்ளது. ரூ.1 கோடி பணத்தை பையில் வைத்து நான் சொல்லும் இடத்தில் வைத்துவிட வேண்டும்.
அந்த பணப் பையை மே 25 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள் காளப்பட்டி - வெள்ளாணைப்பட்டி சாலை கலியபெருமாள் குட்டை அருகேயுள்ள குப்பைமேட்டில் வைத்து விட்டு சென்று விடவும். எனது ஆட்கள் பையை எடுத்துக்கொள்வார்கள். 3 நாட்களுக்கு பிறகு அதே இடத்தில் அதே பையில் இமெயில் ஐடியுடன் ஒரு ரகசிய குறியீட்டை பெறுவீர்கள். கொடுக்கப்பட்ட மின்னஞ்சலுடன் ஒரு குறியீட்டை பகிரவும். இப்படி செய்தால் எங்கள் பக்கத்தில் இருந்து எந்த பிரச்சனையும் வராது. பணப்பையில் ஜிபிஎஸ் டிராக்கிங் வைக்க வேண்டாம்.
நீங்கள் காவல்துறையிடம் சென்றாலோ, எங்களை பிடிக்க முயற்சித்தாலோ உங்கள் குடும்பத்தில் உள்ள மூன்று பேரையும் மூன்று மாதங்களுக்குள் கொல்வோம். இது வெறும் தகவல் அல்ல, எச்சரிக்கை" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மர்மக் கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். கொலை மிரட்டல் விடுத்தவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications