கோவை மக்களே அலர்ட்.. போலீஸ் தான் இல்லையேன்னு இஷ்டத்துக்கு போயிடாதீங்க.. காவல் துறை செய்த மாற்றம்
கோவை: கோவையில் அதிநவீன கேமராக்கள் மூலமாக போக்குவரத்தை கண்காணிக்கும் பணியை மாநகர காவல்துறை தொடங்கியுள்ளது. இதனால், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் எளிதாக சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. சாலை விபத்துக்களுக்கு பெரும்பாலும் போக்குவரத்து விதி மீறல்களே காரணமாக அமைந்து விடுகிறது. குறிப்பாக நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டும் இன்றி விபத்துக்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

சிக்னல்களை மதிக்காமல் சிக்னல் ஜம்பிங் செய்வதால் விபத்தில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. அதேபோல், பைக்கில் செல்பவர்கள் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும். ஆனால், பல நேரங்களில் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் பலரும் பயணிப்பதையும் காண முடிகிறது. இன்னும் சில வாகன ஓட்டிகளோ..போக்குவரத்து போலீசார் இல்லையென்றால் சாலை விதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு வாகன ஓட்டிக்ள் செல்வதை காண முடிகிறது.
இதற்கு கடிவாளம் போடத்தான் தற்போது முக்கிய சிக்னல்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் விதி மீறும் வாகனங்களை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக கோவையில் அண்மைக்காலமாக அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் நடந்து வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு வருகிறது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை சுற்றிலும் 5 கி.மீ. தூரத்துக்கு 32 இடங்களில் ரூ.55 லட்சத்ததில் 110 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்களின் பயன்பாட்டை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- இந்த கேமராக்கள் ஒருவரின் முகத்தை மிக துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு பகுதி, ரேஸ்கோர்ஸ், காந்திபுரம் பஸ்நிலையம், டவுன்ஹால் பகுதி உள்பட மிக முக்கியம் வாய்ந்த இடங்களில் தற்போது பொருத்தப்பட்டு உள்ளது.
விதி மீறும் வாகனங்களின் எண்களை பிரத்யேக சாப்ட்வேரில் டைப் செய்தால் அந்த வாகனம் எங்கு செல்கிறது. எந்த நேரத்தில் செல்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அடுத்தபடியாக மேலும் 5 கி.மீ. தூரத்தில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதுவரை கோவை மாநகர பகுதியில் 26 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் 14 ஆயிரம் கேமராக்கள் சாலையை பார்த்து உள்ளது. இதனால் குற்றம் செய்பவர்களை மிக எளிதாக அடையாளம் காண முடியும்" என்றனர்.












Click it and Unblock the Notifications