அடுத்த விக்கெட்? டென்ஷனில் தமிழக பாஜக கூடாரம்.. அதிருப்தியாளர்களுக்கு வானதி சொன்ன முக்கிய "மெசேஜ்"
தமிழக பாஜகவிலிருந்து சி.டி.நிர்மல் குமார் விலகியது குறித்து வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்
கோவை: தமிழக பாஜவிலிருந்து கடந்த சில நாட்களாக சில முக்கிய புள்ளிகள் விலகி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்தெடுக்கும் பொறுப்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட சலசலப்புகள் கட்சிக்குள் மேலெழுந்துள்ளன. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்து பாஜகவுக்கு சென்று அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றுபோன டாக்டர் சரவணன் முதலில் பாஜகவிலிருந்து விலகினார். விலகும்போது கட்சியின் தலைமை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
அதேபோல, திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யாவுக்கும்-பாஜக சிறுபான்மையினர் தலைவர் டெய்சிக்கும் இடையேயான ஆடியோ உரையாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கட்சியின் மாநில தலைமையை விமர்சித்துவிட்டு இவரும் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். இவரைத் தொடர்ந்து காயத்ரி ரகுராம் ஆகியோர் விலகினர். தற்போது இந்த வரிசையில் புதியதாக இணைந்திருப்பவர்தான் சி.டி.நிர்மல் குமார்.

420 மலை
இவர் பாஜகவிலிந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த நிலையில், அடுத்த நாளே பாஜக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளராக பணியாற்றி வந்த திலீப் கண்ணன் மற்றும் OBC அணி மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் அதிமுகவின் இணைந்தனர். இவர்கள் அனைவரின் குற்றச்சாட்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீதுதான் வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சி.டி.நிர்மல் குமார் விடுத்திருந்த அறிக்கையில், "கடந்த 15 ஆண்டுகளாக கட்சிக்காக உண்டையாக உழைத்துள்ளேன். ஆனால் வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது. சொந்த நிர்வாகிகளையே வேறு பார்த்து அதன் மூலம் ஆனந்தமடைவதை போன்ற அல்பத்தனம் ஏதும் கிடையாது" என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். மேலும் மாநில தலைவர் அண்ணாமலையை 420 மலை என்றும் விமர்சித்திருந்தார்.

வானதி சீனிவாசன்
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இணங்காமல் செல்கிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இது தொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், "இது போன்ற நிகழ்வுகளால் கட்சி மேலும் வளர்ச்சியடையும்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "கூட்டணி கட்சிகளில் மட்டுமல்லாது பிரதான கட்சிகளிலிருந்தும் எங்கள் கட்சிகளுக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேகமான வளர்ச்சி
சமீபத்தில் ஐடி பிரிவு தலைவர் சில விமர்சனங்களை முன்வைத்து வெளியே சென்றுள்ளார். ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஆசை, விருப்பம் இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் வேறு கட்சிகளுக்கு செல்லலாம். அப்படி போகும்போது அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக கூறி விட்டு செல்கின்றனர். ஆகவே இந்த விஷயத்தை பொறுத்த அளவில் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் வரபோவதில்லை. தற்போது கட்சி புதிய நபர்களால் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

எதிர்காலம்
முன்னதாக இன்று காலை சி.டி.நிர்மல் குமார் கூறுகையில், "பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் கிடையாது. கட்சிக்குள் இருக்கும் முக்கிய நபர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பலர் என்னிடம் தொடர்பு கொண்டு இது குறித்து பேசியிருக்கிறார்கள்" என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications