கோவை- மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் இருந்து தினமும் மதியம் 2.30 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவையில் இருந்து தினமும் மதியம் 2.30 மணிக்கு கோவை-மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர் வழியாக இரவு 7.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேருகிறது. பின்னர் இந்த ரயில் அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு , சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, கொடைரோடு, திண்டுக்கல் , ஒட்டன்சத்திரம், பழனி , உடுமலைப்பேட்டை , பொள்ளாச்சி கிணத்துக்கடவு , போத்தனூர் வழியாக கோவைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடைகிறது.

முதல் நாள் இரவு 7.35 மணிக்கு மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் காலை 7 மணி வரை மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் மதுரைக்கு இரவு 7.35 மணிக்கு வரும் இந்த ரயிலை அதன் பின்னர் அங்கிருந்து செங்கோட்டை வரை இயக்கினால் விருதுநகர், தென்காசி மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 6 மணிக்கு பின்னர் ரயில் வசதி இல்லை என்பதால் இந்த ரயில் இரண்டு மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்கும்.
அதே போல் அதிகாலை நேரத்தில் செங்கோட்டையில் இருந்து இந்த ரயில் இயக்கப்பட்டால் கேரளா மாநில மக்களும், தென் மாவட்ட மக்களும் கல்வி, தொழில், மருத்துவ வசதிக்காக மதுரை, கோவை சென்று வர வரப்பிரசாதமாக இருக்கும். அதே நேரத்தில் விருதுநகர் மாவட்ட மக்களும் கோவைக்கு சென்று வர கூடுதல் ரயில் வசதி கிடைக்கும் இன்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது செங்கோட்டை கோவை வழித்தடத்தில் மேட்டுப்பாளையம் வரை வாராந்திர ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதனால் கோவை-மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல் தேனி மாவட்ட மக்கள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். தினமும் காலையில் 8.20 மணி அளவில் மதுரையில் இருந்து கிளம்பி 10.30 மணி அளவில் போடி நாயக்கனுருக்கு பயணிகள் ரயில் செல்கிறது. இதே போல் தினமும் மாலை 5:50க்கு போடிநாயக்கனூரில் இருந்து கிளம்பி இரவு 7.50 க்கு பயணிகள் ரயில் மதுரைக்கு செல்கிறது.
இந்த வழித்தடத்தில் காலையில் மதுரைக்கு செல்லும் வகையில் ஒரு ரயிலும் மாலையில் மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரும் வகையில் ஒரு ரயிலும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல் போடிநாயக்கனூர் சென்னை விரைவு ரயில் தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications