காலம் செய்த கோலம்! நாட்டை விட்டு ஓடும் முன்பு தமிழர்களிடம் உயிர்பிச்சை கேட்கும் ராஜபக்சே குடும்பம்
கொழும்பு: இலங்கையில் சிங்களரின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோரது குடும்பங்கள் இப்போது தமிழர்களிடம் தஞ்சமடைந்திருப்பதாக கொழும்பு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் 2 மாதங்களாக போராடி வரும் போராட்டகாரர்களின் கோரிக்கை. அப்படி நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது எனில் பதவி விலகுங்கள் என்பது அவர்களின் வேண்டுகோள். இந்த கோரிக்கையை வலியுறுத்தியே கொழும்பு காலிமுகத் திடலில் 30 நாட்களாக அமைதி வழிப் போராட்டம் நடத்தி வந்தனர்.

கொழும்பு வன்முறை
போராட்டங்களின் தொடர் நெருக்கடியால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகும் முன்பாக கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார். ராஜபக்சே ஏவிவிட்ட குண்டர்கள் தாக்குதல்களால் போராட்டகாரர்கள் முதலில் அதிர்ந்து போயினர். பின்னர் போராட்டக்காரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ராஜபக்சே குண்டர்களை நையப்புடைத்தனர். அத்துடன் ராஜபக்சே குண்டர்கள் வந்த வாகனங்கள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.

துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி
கொழும்பு காலிமுகத் திடலில் ராஜபக்சே கும்பல் பற்ற வைத்த பெருநெருப்பு இலங்கை முழுவதும் ராஜபக்சே கும்பலுக்கே எதிராக திரும்பியது. கொழும்பு தொடங்கி தென்னிலங்கை முழுவதும் ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள், மாகாண சபை பிரதிநிதிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் என சகலரது வீடுகள், மாளிகைகள், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. விடிய விடிய இந்த தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. மேலும் 2 இடங்களில் ராஜபக்சே குண்டர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர்.
Recommended Video

தப்பி ஓடும் ராஜபக்சே குடும்பம்
இந்நிலையில் ராஜபக்சேக்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக இலங்கையை விட்டு தப்பி ஓடும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது ஏற்கனவே மகிந்த ராஜாக்சேவின் 2-வது மகன் நாமல் ராஜபக்சே, மனைவியுடன் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். இந்த நிலையில் சிங்களர் வாழும் தென்னிலங்கையில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் தமிழர் பகுதிகளுக்கு ராஜபக்சே குடும்பத்தினர் அடுத்தடுத்து தஞ்சமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழரிடம் உயிர் பிச்சை கேட்கும் ராஜபக்சே
தமிழீழத்தின் அரசியல் தலைநகராக போற்றப்படும் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமுக்கு ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழர் வாழும் பகுதிகளில் தற்காலிகமாக தங்குவதுதான் தங்களுக்கு பாதுகாப்பானது எனவும் ராஜபக்சே குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனராம். இதே தமிழர்களைத்தான் ராஜபக்சே குடும்பம் கொத்து கொத்தாக பல லட்சக்கணக்கில் கொன்று அழித்து குவித்தது. அதுவும் 2009-ம் ஆண்டு மே மாதத்தில் ராஜபக்சே குடும்பம் நிகழ்த்திய கோர தமிழினப் படுகொலை இன்றைக்கும் தீக்கனலாய் கொழுந்து விட்டுதான் எரிகிறது.. அதே மே மாதத்தில்தான் தமிழரிடமே ராஜபக்சே குடும்பம் உயிர்பிச்சை கேட்டு தஞ்சமடைந்திருப்பது காலத்தின் கோலம்தான்!












Click it and Unblock the Notifications