வர்த்தக விசாவில் சென்று மத பிரசாரம்.. இலங்கையில் கிளம்பிய எதிர்ப்பு..பால் தினகரன் பாஸ்போர்ட் பறிப்பு
கொழும்பு: இலங்கைக்கு வர்த்தக விசாவில் சென்ற பால் தினகரன் அங்கு மத பிரசாரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அவரது பாஸ்போர்ட் பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்து அமைப்பினர் அளித்த புகாரை அடுத்து பால் தினகரன் மதப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை காருண்யா பல்கலைக்கழக வேந்தராக இருப்பவர் பால் தினகரன். 'இயேசு அழைக்கிறார்' என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 2021ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இயேசு அழைக்கிறார்' அமைப்புக்கு வந்துள்ள வெளிநாட்டு பண உதவிகள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. பால் தினகரனின் பிரசாரக் கூட்டங்களுக்கு வரும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டில் வைத்திருப்பதும், இந்தியாவில் பெறப்பட்ட நிதியை இந்தியாவிலேயே கணக்கில் காட்டாமல் முதலீடு செய்துள்ளதும், வெளிநாட்டில் பெறப்பட்ட நிதியை வெளிநாட்டிலேயே பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் வருமான வரித் துறை சோதனையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பால் தினகரன்
வெளிநாடுகளுக்கும் அவ்வப்போது பால் தினகரன் சென்று வருவார். கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கை சென்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள மணிபே மற்றும் ரசவின் தொட்டம் பகுதிகளில் கடந்த 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மதப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஜீசஸ் கால்ஸ் குழுவினர் துண்டுப் பிரசுரங்களை பகிரங்கமாக விநியோகித்துள்ளனர்.

இந்து அமைப்புகள் எதிர்ப்பு
இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சிவசேனா அமைப்பு கடும்எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், வர்த்தக விசாவில் இலங்கை வந்துள்ள பால் தினகரன், இங்கு மதப் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க கூடாது என்று போலீஸ் டிஐஜி.யிடமும் மக்களிடமும் சிவசேனா அமைப்பினர் எடுத்து கூறினர்.

மத பிரச்சாரம்
பால் தினகரன் மதக்கூட்டத்தில் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மணிபேவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இந்துக்கள் யாழ்ப்பான காவல்துறை டிஐஜிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த வியாழன் மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்த பால் தினகரன் மற்றும் அவரது குழுவினர் இமிக்கிரேசன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும் அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.

பாஸ்போர்ட் பறிப்பு
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரின் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து, அவர்களை மட்டும் விடுதியில் தங்க அனுமதித்தனர். பால் தினகரன் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன












Click it and Unblock the Notifications