இலங்கை ஜனாதிபதி தேர்தல்- பொது வேட்பாளர் அரியநேந்திரனை ஏற்க தமிழரசு கட்சி மறுப்பு- சஜித்துக்கு ஆதரவு!
வவுனியா: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் பொதுவேட்பாளரான அரியநேந்திரன், சொந்த கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் அவரை ஆதரிக்க முடியாது; எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குதான் ஆதரவு என்றும் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து அரியநேந்திரன் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் தமிழரசு கட்சி அதிரடித் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் தமிழரசுக் கட்சியின் இத்தீர்மானத்தை மாவை சேனாதிராஜா உள்ளிட்ட சில தலைவர்கள் எதிர்க்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான தபால் வாக்கு பதிவு வரும் 4-ந் தேதி நடைபெறும்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, நாமல் ராஜபக்சே, அரியநேந்திரன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். 7 தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் எம்பி அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இலங்கை தமிழ் கட்சிகளில் முக்கியமான தமிழரசு கட்சி, அரியநேந்திரனை பொது வேட்பாளராக ஏற்க மறுத்துவிட்டது. இத்தனைக்கும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்தான் அரியநேந்திரன். ஆனாலும் அரியநேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் விலக வேண்டும்; வவுனியாவில் நடைபெற்ற மத்திய குழு தீர்மானத்தின் படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையே தமிழரசுக் கட்சி ஆதரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட சிலர் இதனை ஏற்க மறுத்தும் வருகின்றனர். இதனால் அதிருப்தி குழுவை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் தமிழரசுக் கட்சி திடீரென சஜித் பிரேமதாசவை எந்த அடிப்படையில் ஆதரிக்கிறது? தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண சஜித் உறுதியளித்தாரா? என்பது உள்ளிட்ட கேள்விகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் வெளிநாட்டு அரசுகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப தமிழரசுக் கட்சி இத்தகைய மோசமான முடிவை எடுத்துவிட்டதா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்கள், சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதில்லை என்கிற கருத்தையும் மூத்த பத்திரிகையாளர்கள் முன்வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications