இலங்கைக்கு அண்ணன் மாதிரி உதவும் இந்தியா.. மோடிக்கும் நன்றி.. ஜெயசூர்யா உருக்கம்
கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக உதவிகள் செய்து வருகிறது. இந்நிலையில் மூத்த சகோதராக இருந்து இலங்கைக்கு உதவும் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி என அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்துள்ளன. உணவு உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
பல மணி நேரம் மின்வெட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத இந்த பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கைக்கு பெட்ரோல், டீசல் உதவி
இலங்கை இந்தியா உள்பட சில நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000 மெட்ரிக் டன் பெட்ரோல், 40,000 மெட்ரிக் டன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளது என இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டாலர் எண்ணெய் கடனின் ஒரு பகுதியாக இது வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 5ம் தேதி முதல் இந்தியா சார்பில் இலங்கைக்கு 5வது முறையாக எரிபொருள் உதவி செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் நன்றி
இந்நிலையில் இந்தியாவின் உதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா, அதிரடி தொடக்க ஆட்டக்காரரான சனத் ஜெயசூர்யா ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சனத் ஜெயசூர்யா கூறியுள்ளதாவது:

போராட்டம் ஏன்
இலங்கையில் நெருக்கடியான காலக்கட்டம் நிலவுகிறது. துரதிர்ஷ்டவசமாக மக்கள் இந்த பிரச்சனையை சந்தித்து மோசமான சூழலில் உள்ளனர். அவர்களால் வாழ முடியாத நிலையில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதோடு, நீண்டநேர மின்தடை உள்ளது. இதனால் தங்கள் பிரச்சினையை அரசிடம் காட்ட மக்கள் வெளியில் வந்து போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு அரசு உரிய முறையில் தீர்வு காணாவிட்டால் பேரழிவாக மாறிவிடும். பிரச்சனையை தீர்ப்பதற்கான பொறுப்பு தற்போதைய அரசாங்கத்தையே சேரும்.
Recommended Video

மூத்த சகோதரராக இந்தியா
அண்டை நாடாக உள்ள இந்தியா நமது நாட்டுக்கு மூத்த சகோதரராக இருந்து உதவி வருகிறது. இந்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் எங்களை பொறுத்தவரை உயிர்வாழ்வது எளிதானது அல்ல. நாங்கள் மீண்டு வருவோம் என்று நம்புகிறோம். இந்தியா மற்றும் பிற நாடுகளின் உதவியுடன் இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications