அடக்குமுறையை மீறி இலங்கையில் பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம்-பாசிஸ்டுகள் என ரணில் ஆவேசம்
கொழும்பு: இலங்கையில் ராணுவத்தின் அடக்குமுறையையும் மீறி கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். ரணில் அலுவலகத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதன் மாடியில் இலங்கை தேசியக் கொடியை பறக்கவிட்டனர். ராணுவத்தின் தாக்குதலில் போராட்டக்காரர்கள் 24 பேர் படுகாயமடைந்தனர்.
Recommended Video
இலங்கை பொருளாதார நெருக்கடியை சீரமைக்க முடியாததால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பதவி விலகுவதாக அறிவித்திருந்த போதும் அதை முறையாக வெளியிடவில்லை. இலங்கையின் இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தற்காலிக ஜனாதிபதியானார்.

பல்லாயிரக்கணக்கானோர் முற்றுகை
ஆனால் பொதுமக்களோ, கோத்தபாயவை சிறையில் அடைக்காமல் ரணில் விக்கிரமசிங்கே தப்ப விட்டது தவறு; ரணில் விக்கிரமசிங்கே தற்காலிக ஜனாதிபதியாகக் கூடாது என போர்க்குரல் எழுப்பியுள்ளனர். அத்துடன் இன்று காலை முதல் கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கேவின் பிரதமர் அலுவலகத்தையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அடக்குமுறையில் ராணுவம்
இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவில் போலீசாரும் ராணுவமும் குவிக்கப்பட்டனர். இலங்கையின் விமானப் படை ஹெலிகாப்டர்களும் போராட்டக்காரர்களை மிரட்டும் வகையில் வானில் பறந்து கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது முதலில் கண்ணீர்புகை குண்டுகளை வீசியது ராணுவம். பின்னர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வானை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது ராணுவம்.

பிரதமர் அலுவலகம் வசமானது
இலங்கை ராணுவத்தின் இந்த அடக்குமுறைகளை எதிர்கொண்டு முன்னேறிச் சென்று ரணில் விக்கிரமசிங்கேவின் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். ரணிலின் அலுவலகத்தின் மாடியில் சென்று இலங்கை தேசியக் கொடியையும் போராட்டக்காரர்கள் பறக்கவிட்டனர். ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் போராட்டக்காரர்கள் 24 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இலங்கை அரசு ஊடகமான ரூபவாஹினியையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதனால் ரூபவாஹினி ஒப்ளிபரப்பு சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
|
பாசிஸ்டுகள் என விமர்சனம்
இந்நிலையில் தமது அலுவலகம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும்தான் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலையை மீட்டெடுக்கவே போலீசாருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பாசிசத்தை கையில் எடுத்துள்ளனர்.பிரதமர் அலுவலகத்தைப் போல கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளின் வீடுகளை முற்றுகையிடவும் போராட்டக்காரர்கள் சதித் திட்டம் தீட்டி உள்ளனர் என கூறியுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே.












Click it and Unblock the Notifications