இதுவரை 1,200.. ராஜஸ்தானில் கொத்து கொத்தாக சாவும் மாடுகள். . அரசின் நடவடிக்கை என்ன?
ராய்ப்பூர்: தோல் கழலை நோய் பரவலின் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்து கொத்தாக மாடுகள் இறந்து வருகின்றன. இதுவரை 1,200 க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துவிட்டதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தோலில் கட்டி கட்டியாக காணப்படும் தோல் கழலை நோய் கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக கடந்த ஏப்ரல் மாதம் இந்த நோய் மாடுகள் மத்தியில் பரவியதாக சொல்லப்படுகிறது.

எதிர்ப்பு சக்தி குறைந்த மாடுகளுக்கு ஆபத்து
எதிர்ப்பு சக்தி குறைந்த கால்நடைகளை உயிரை குடிக்கும் இந்த நோயால், இதுவரை 1,200 க்கும் மேற்பட்ட மாடுகள் ராஜஸ்தானில் உயிரிழந்து இருப்பது கால்நடைகளை வளர்ப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், '3 மாத இடைவெளிக்குள் 25 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவியுள்ளது. ஜோத்பூர் மாவட்டத்தில் 254 கால்நடைகள் தோல் கழலை நோய்க்கு உயிரிழந்து இருக்கின்றன. இந்த நோயின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு, கால்நடைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் முகாம் போடப்பட்டுள்ளது.

25 ஆயிரம் மாடுகள் பாதிப்பு
மாடுகளை தனித்தனியே கட்டி வைக்க வேண்டும் என்று அதை வளர்ப்பவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். முதலில் எல்லையோர மாவட்டங்களான ஜெய்சல்மார், பர்மர் ஆகிய இடங்களில் மட்டுமே இந்த நோய் கண்டறியப்பட்டது. தற்போது ராஜஸ்தானின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கும் இந்த நோய் பரவி விட்டது. கால்நடைகளை குறிவைத்து தாக்கும் இந்த தோல் கழலை நோய் பெரும்பாலும் பசு மாடுகளையே தாக்குகின்றன. இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுமாடுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்த எதிர்ப்பு சக்தி கொண்ட மாடுகள் மத்தியில் வேகமாக பரவும் இந்த நோய், பிற நோய் தாக்கவும் வழி வகுக்கிறது. இதனால் மாடுகள் உயிரிழக்கின்றன.

சிகிச்சை முறைகள் இல்லை
இந்த நோய்க்கு சிகிச்சை முறைகள் எதுவும் இல்லை, தடுப்பூசிகளும் இல்லை. அறிகுறிகளுக்கு ஏற்ப மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆரம்பக் கட்ட அறிகுறிகள் தோலில் கட்டி மற்றும் அதிக காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் ஆகியவை ஆகும். எனவே, பசு மாடுகளை வளர்ப்பவர்கள் இந்த அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்" என்று கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. இந்த நோய் பரவல் கடும் பொருளாதார தாக்கத்தையும் இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

நோய் குறித்து ஆய்வு
ஒட்டு மொத்த மாடுகளில் 5-10 சதவீதம் இந்நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். கடந்த 2 வாரங்களில் 254 மாடுகள் உயிரிழந்தாதாக தகவல் வந்தாலும் உண்மையான நிலவரம் கூடுதலாக இருக்கும் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தரப்பு கூறுவது மேலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த நோய் பரவல் அதிகமாக காணப்படும் பகுதியான ஜோத்பூருக்கு சென்ற கால்நடை மருத்துவர்கள், அங்கு நோய் தடுப்பு முறை பற்றி விளக்கம் அளித்தனர். மேற்கு ராஜஸ்தானில் பசுக்கள் இடையே பரவும் இந்த நோய் குறித்து ஆய்வு செய்ய இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு
விஞ்ஞானிகளின் அறிவுரைப்படி, தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும் தனது ட்விட்டர் பதிவில் கைலாஷ் சவுத்ரி பதிவிட்டுள்ளார். ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையில் மாடுகள் இறந்ததற்கு இந்த தோல் கழலை நோயே காரணம் என்று கூறிய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, இதனால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications