கறிக்கடைக்காரர் வீட்டுக்கே போய்.. கதவை தட்டி சம்பவம் செய்த முதலை.. சிதம்பரத்தில் சுவாரஸ்யம்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராமத்தில் கறிக்கடைக்காரரின் வீட்டு ஹாலிங் காலிங் பெல்லை காலையிலேயே தட்டி ஹாய் சொல்லியிருக்கு ராட்சத முதலை.. அதாவது கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்து அரண்ட கறிக்கடைக்காரர் ராட்சத முதலையை கண்டு அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.
வீட்டுக்கு விருந்தாளிகள் வருவது இயல்பு தான்.. அதுவும் எதிர்பார்க்காத அளவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விருந்தாளிகள் வந்தால் எப்படி இருக்கும். அதேபோல் சற்றும் சம்பந்தம் இல்லாத வனவிலங்குள் வீட்டிற்கு வந்து கதவை தட்டினால் எப்படி இருக்கும்.. உண்மையில் மிகவும் பயந்து போவார்கள்.

வால்பாறை, மூணாறு, மறையூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு போன்ற மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு யானைகள் அடிக்கடி விருந்தாளியாக சென்று கதவை தட்டும். கதவை திறக்க வேண்டும் என்று என்பதற்காக அல்ல.. கதவை உடைப்பதற்காக.. உள்ளே கிடைக்கும் அரிசி பருப்பு, பழங்களை சாப்பிட இப்படி செய்யும்.. குறிப்பாக ரேஷன் கடைகள் என்றால் யானைகளுக்கு கொள்ளை பிரியம்.
மலைப்பகுதிகளில் இப்படி என்றால் சதுப்பு நிலங்களில் அப்படி வேறுமாதிரி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் நீர் நிலை சதுப்பு நிலங்கள் கடற்கரையை ஓட்டி நீண்ட தூரத்திற்கு காணப்படுகிறது. இதேபோல் பழைய கொள்ளிடம் ஆறும் உள்ளது. இங்கு முதலைகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரசித் என்பவர் அந்த பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு குடும்பத்துடன் வீட்டில் தூங்கியிருக்கிறார்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் யாரோ, வீட்டின் கதவை தட்டிய சத்தம் கேட்டு அப்துல்ரசித் எழுந்தார். கதவை திறந்து பார்த்தபோது, அங்கு யாருமே இல்லை. ஆனால் வீட்டு வாசலில் கீழே குனிந்து பார்த்தால், படிக்கட்டில் ராட்சத முதலை ஒன்று கிடந்தது. அந்த முதலைதான், அவரது வீட்டின் கதவை தலையால் முட்டியதும், அந்த சத்தம் கதவை தட்டியதுபோன்றும் அவருக்கு கேட்டிருக்கிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்களும் கூச்சலிட்டதால் முதலை வேகமாக அங்கிருந்து கடந்து சென்றது. உடனே அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தார்கள். அவர்களது சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்தார்கள். இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வனத்துறையினர் நாஞ்சலூர் கிராமத்திற்க விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கிராம மக்கள் உதவியுடன், அந்த முதலையை லாவகமாக பிடித்து வாயையும், கண்களையும் துணியால் கட்டினர். 8 அடி நீளமுள்ள அந்த ராட்சத முதலை 110 கிலோ எடையுடன் இருந்தது. பழைய கொள்ளிடம் ஆற்றில் இருந்து முதலை ஊருக்குள் புகுந்தது தெரியவந்தத. பின்னர் அந்த முதலை, வக்காரமாரி நீர்தேக்கத்தில் விடப்பட்டது. இந்த சம்பவத்தால் நீண்ட நேரம் அந்த கிராமத்தில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications