கடலூரில் பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் பாம்பு கடித்து உயிரிழப்பு.. சின்ன தவறால் நடந்த பெரிய சோகம்
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிடிப்பட்ட நல்ல பாம்பை காப்புக்காட்டிற்கு எடுத்து செல்ல முயன்ற போது, நல்ல பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் 36 வயதாகும் உமர் அலி. இவரது மனைவி பர்ஹத் நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாம்பு பிடி தன்னார்வலரான உமர் அலி கடந்த 1½ ஆண்டுகளாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 தேதி இரவு பண்ருட்டி முத்தையா நகரில், கனகராஜ் என்பவரின் வீட்டில் நல்ல பாம்பு புகுந்ததாக தகவல் வந்தது. தொடர்ந்து உமர் அலி அங்கு சென்று கொண்டிருந்தார். ஆனால் அதே வீட்டைச் சேர்ந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பண்ருட்டி தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பினை அந்த வீட்டில் பிடித்து விட்டார்கள்..
தீயணைப்பு வீரர்கள் பாம்பினை பிடித்து விட்டு அவர்கள் வெளியில் வரும் நேரம் உமர் அலி அங்கு சென்றார். அவர்களிடம் பாம்பை கொடுங்கள் நான் காப்பு காட்டில் விட்டுவிடுகிறேன் என உமர் அலி கூறியதால் தீயணைப்புத் துறையினர் அந்த பாம்பினை அவரிடம் கொடுத்துள்ளார்கள். அந்தப் பாம்பை தன்னுடைய டப்பாவிற்கு உமர் அலி மாற்ற முயன்ற போது அந்த பாம்பு திடீரென உமர் அலியை கடித்துவிட்டது.
கடுமையான விஷம் உள்ள நல்லப்பாம்பு என்பதால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உமர்அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு பிடி வீரர், பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் கடலூரில் பாம்பு பிடி வீரராக செயல்பட்டு வந்த பூனம் சந்த் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். இப்போது மேலும் ஒரு தன்னார்வலர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் தன்னார்வலர்கள் பாம்பு மற்றும் கொடிய விஷம் உள்ளவைகளை பிடிக்க கூடாது தீயணைப்புத்துறை வனத்துறை அலுவலர்கள் மட்டும் தான் பிடிக்க வேண்டும் என பொது மக்களிடையே கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications