கடலூரில் சின்னதாய் ட்ரிக்ஸ்.. 6 கோடி சம்பாதித்த பாமக நிர்வாகி.. வங்கிகளையே மிரள வைத்த ட்விஸ்ட்
கடலூர்: ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருப்பார்கள் என்று ஒரு பழமொழி உண்டு.. அதேபோல் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். நடைமுறையில் நம்பவே முடியாத விஷயங்களை செய்வதாக கூறி நம்ப வைத்து சிலர் ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் வங்கியில் ஏலம் விடப்படும் நகையை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி பாமக நிர்வாகி ஒருவர் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. அவரை பற்றி விசாரித்தால் 6 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்வோரிடம் பலர் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள். அதேபோல் கடன் வாங்கி தருவாக கூறும் நபர்களிடமும் பணம் கொடுத்து பலரும் ஏமாறுகிறார்கள். அந்த வகையில் புதிதாக வங்கியை வைத்து சிலர் மோசடி செய்கிறார்கள்.அப்படி ஒரு மோசடி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டாரங்களில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாமக நிர்வாகி கைது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு நபர்களிடம் ரூ.6 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட பாமக இளைஞரணி நிர்வாகி சலீம் என்பவரை போலீசார் கைது செய்துள்னர். கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கிருபை என்பவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறுகையில், கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த ஷேக்தாவூத் மகனான 28 வயதாகும் சலீம் என்பவர், வங்கியில் ஏலம் விடப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.10 லட்சத்தை என்னிடம் வாங்கினார். ஆனால் நகையை வாங்கித் தராமல் ஏமாற்றுகிறார். பணத்தைத் திரும்பக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்" என்று கூறியிருந்தார்.
பலரிடம் மோசடி
இதேபோன்று பெண்ணாடத்தைச் சேர்ந்த மெய்கண்டநாதன் என்பவர் அளித்த புகாரில், மருத்துவப் படிப்பு பயில வங்கிக்கடன் பெற முயற்சித்தபோது, விரைவாக கடன் வாங்கித் தருவதாகக் கூறி சலீமிடம் ரூ.6 லட்சம் வரை கொடுத்ததகாவும், ஆனால் அவர் மோசடி செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். இதுபோன்று 17 பேரிடம் ரூ.1.75 கோடி வரை சலீம் முறைகேடு செய்திருப்பதாக விருத்தாசலம் காவல்நிலையத்தில் புகார்கள் எழுந்தது.
திருப்பூரில் கைது
இதுதவிர, சலீம் மீது குற்றச்சாட்டுகள் கூறி பல்வேறு மனுக்கள் பெண்ணாடம், திட்டக்குடி, கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையங்களுக்கு புகார் வந்தது. மொத்தத்தில் ரூ.6 கோடி வரை மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து சலீம் மீது விருத்தாசலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஐயனார் வழக்குப்பதிவு செய்தார்.
அதைத்தொடர்ந்து, திருப்பூரில் தலைமறைவாக இருந்த சலீமை போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சலீம், கடலூர் மேற்கு மாவட்ட பாமக இளைஞரணி நிர்வாகியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications