சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய கட்டணம்! தீட்சிதர்கள் மீது பக்தர் புகார்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனசபை மீது ஏறி தரிசனம் செய்வதில் ஏற்கெனவே பிரச்னை இருந்தது வந்தது. இப்படி இருக்கையில், கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய, பக்தர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக தீட்சிதர்கள் மீது ஜெயஷீலா எனும் பக்தர் புகார் அளித்துள்ளார். இதன் மூலம் இந்த பஞ்சாயத்து மீண்டும் வெடித்திருக்கிறது.
சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஆடல்வல்லான் நடராஜர் திருக்கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர். நடராஜரின் பொற்சபையாகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும். அருள்மிகு சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கு, அரசால் வழங்கப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், அமர்ந்து தரிசனம் செய்தல் மற்றும் அங்கபிரதட்சனம் செய்தல் ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது. இந்த நேரத்தில்தான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி வழிபட தீட்சிதர்கள் தடை விதித்து இருந்தனர்.
நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள், கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய, தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியதாக பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ததற்காக அங்குள்ள தீட்சிதர்களால் கண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோயிலில் சுவாமி தரிசனம் எப்படி செய்ய வேண்டும்? எங்கு செய்ய வேண்டும்? என பக்தர்களின் வழிப்பாட்டு உரிமையில், தீட்சிதர்கள் தொடர்ந்து தலையிட்டு வந்தது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை தரிசனத்தை தடுக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என, இந்த சமய அறிநிலையத்துறை அதிரடியாக கூறியிருந்தது.
இப்படி இருக்கையில், இன்று தீட்சிதர்கள் மீது மீண்டும் புகார் எழுந்திருக்கிறது. அதாவது, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய, பக்தர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக, ஜெயஷீலா எனும் பக்தர் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே வேறொரு குற்றச்சாட்டு சம்பந்தமாக ஜெயஷீலா அளித்த புகாரில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த புகார் கனகசபை குறித்த விவதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications