மூதாட்டியுடன் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி... சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
கடலூர் : சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு வயதான மூதாட்டியுடன் இரண்டு பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த ராஜவல்லி (வயது 85) என்பவரின் கணவர் சந்தானம் என்பவர், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தில்லைவிடங்கன் தெற்கு தெருவில் வசித்து வரும் ராஜவல்லிக்கு, 52 வயதில் பீமாராவ் என்ற மகனும், 50 வயதில் ராமராவ் என்ற மகனும், 50 வயதில் சஞ்சய் காந்தி என்ற பெண்ணும் உள்ளனர். மூன்று பேரும் திருமணம் ஆகி தில்லைவிடங்கன் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே, மூத்த மகன் பீமாராவ், 38 சென்ட் புஞ்சை நிலத்தை, சஞ்சய்காந்தி மற்றும் இளைய மகன் ராமராவ் ஆகியோருக்கு தெரியாமல் விற்றுவிட்டார். இதுகுறித்து, பார்வை மற்றும் செவித்திறன் வெகுவாக பாதித்த ராஜவல்லி, கடந்த 09-05-2022 அன்று சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அவர்களை நேரில் அழைத்து 02.06.2022 அன்று விசாரணை செய்து, விற்ற இடத்தின் பதிவு நிராகரித்து சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யும் ஆனந்தி என்பவர் தன்னுடைய பேங்க் பாஸ்புக்கை கேட்டதாகவும், தனக்கு தகுந்த நியாயம் வழங்குமாறும் ராஜவல்லி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கையில் மனுவை வைத்துக்கொண்டு ராஜவல்லி மூதாட்டி, மகள் மற்றும் ராமராவ் மனைவி ஆகிய மூன்று பேரும் இன்று மதியம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தனித்தனி மன்னனை கேனுடன் தலையில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தற்காப்பு நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியிடம் இது குறித்து கூறியதாவாது : இந்த அம்மாவின் ஒப்புதலோடு மூன்றாவது நபருக்கு இடத்தை விற்று விட்டார்கள். ஆனால் பணம் இவர்களுக்கு கொடுக்காது பின்னர்தான் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறேன். மேலும் இந்த பத்திர பதிவு குறித்து இவர்கள் இனிமேல் கோர்ட்டுக்கு தான் செல்ல வேண்டும். எங்களுக்கு எந்த விதமான அதிகாரம் கிடையாது. இவர்கள் இனிமேல் கோர்ட்டில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
ஆனால், இதுவரை ராஜவல்லி மற்றும் சஞ்சய் காந்தி மற்றும் பீமாராவ் குடும்பத்திற்கு விற்ற பணத்தில் இவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை. ஆதலால் ஆத்திரம் அடைந்து, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications