கலங்கிய கடலூர்.. எமன் பேருந்தால் 3 உயிர் போச்சே! வேதனையுடன் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்
கடலூர்: சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில், "கடலூர் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் இராசாக்குப்பம் மதுரா, ரோட்டான்டிக்குப்பம் கிராமம், விருத்தாசலம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை அருகே இன்று (21 - 8 - 2023) மதியம் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், வடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி நோக்கி வந்த காரும் எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
மேலும், விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாக வடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு சென்ற இருசக்கர வாகனத்தின் மீதும் பேருந்து மோதி உள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திருமதி விக்டோரியா, க/பெ.அந்தோணிசாமி (வயது 65) என்பவரும், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த புவனகிரி வட்டம், சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த திரு. விஜயகுமார், த/பெ.ஏழப்பன் (வயது 24) மற்றும் திரு.தாமரைச் செல்வன், த/பெ.கோதண்டபாணி (வயது 23) ஆகிய மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது எனது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications