"யாரையும் கிட்ட விட மாட்டேன்!" கடலூரில் குட்டிகளை விட்டு சென்ற நாய்! படமெடுத்து பாதுகாத்த நல்லபாம்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் குட்டி நாய்களைப் பத்திரமாக நல்ல பாம்பு ஒன்று பாதுகாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
எப்போதும் மனிதர்களைக் காட்டிலும் விலங்குகள் மற்ற விலங்குகளைப் பத்திரமாகவே பாதுகாக்கும்.. தாவரங்களைச் சாப்பிடும் விலங்குகளும் சரி, பிற விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் விலங்குகளும் இதையேதான் செய்யும்.
வேட்டையாடி சாப்பிடும் விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும் தவிர. மற்ற பெரும்பாலான நேரங்களில் தனக்கு ஆபத்து ஏற்படாத வரை மற்ற விலங்குகளை.. அவ்வளவு ஏன் மனிதர்களையும் கூட தொந்தரவு செய்யாது.

நாய் குட்டிகள்
இதற்கிடையே நல்ல பாம்பு ஒன்று நாய்க் குட்டிகளைப் பத்திரமாகப் பாதுகாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த சம்பவம் நமது கடலூரில் தான் நடந்துள்ளது. கடலூர் அடுத்துள்ள பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்க்கரை. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கருவுற்று இருந்த அந்த நாய் சமீபத்தில் மூன்று குட்டிகளைப் போட்டுள்ளது.

நல்ல பாம்பு
வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் அந்த நாய் தனது குட்டிகளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றுள்ளது. அப்போது அங்கு நல்ல பாம்பு ஒன்று வந்துள்ளது. குட்டிகளைப் பார்த்ததும் அதன் அருகே நல்ல பாம்பு வந்துள்ளது. தான் குட்டிகளை வைத்திருந்த இடத்திற்கு அருகே பாம்பு இருப்பதைப் பார்த்த தாய் நாய் வேகமாக அங்கு ஓடி வந்துள்ளது. இருப்பினும், அந்த பாம்பு குட்டிகளைத் தொடக் கூட இல்லை. வேறு விலங்குகள் அதன் அருகே வராமல் இருக்கப் பாதுகாத்து படம் எடுத்து நின்றுள்ளது.

கிட்ட வரக்கூடாது
தாய் நாயைக் கூட அந்த நல்ல பாம்பு அருகே விடவில்லை. இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் தவித்த அந்த நாய் கத்த தொடங்கியுள்ளது. நாயின் சத்தம் கேட்டு அங்கு வந்த உரிமையாளர், என்ன எனப் பார்க்க வந்துள்ளார். நாய்க் குட்டிகள் முன்பு நல்ல பாம்பு படம் எடுத்து நிற்பதைப் பார்த்து ஒரு நொடி மிரண்டுவிட்டார். பாம்பை விரட்ட முயன்ற போதும், அது அங்கிருந்து நகரவில்லை. இதை அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோதான் இப்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வீடியோ
இதற்குள் அப்பகுதியில் பலர் கூடிவிட்டனர். அவர்களும் கூட நல்ல பாம்பை விரட்ட முயன்றனர். இருந்த போதிலும், அப்போதும் கூட நல்ல பாம்பு அங்கிருந்து நகரவே இல்லை. நீண்ட நேரமாகப் பாம்பு அப்படியே இருந்ததால், வேறு வழியின்றி அப்பகுதியினர் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அங்கு வரும் வரை கூட நல்ல பாம்பு அங்கிருந்து நகரவில்லை. அதேநேரம் நாய்க் குட்டிகளையும் சீண்டவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வனத்துறையினர், நல்ல பாம்பைப் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.











Click it and Unblock the Notifications