கடலூர் அருகே பள்ளி மாணவன் உள்பட 2 பேரின் ‘ஷூ'வில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்புகள்
கடலூர்: கடலூர் அருகே பள்ளி மாணவன் உள்பட 2 பேரின் 'ஷூ'வில் பதுங்கி இருந்து கொண்டு நல்ல பாம்புகள் படமெடுத்து ஆடியது. இது தொடர்பாக வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. நல்ல வேளையாக ஷூவிற்குள் பாம்புகள் இருப்பதை அவர்கள் முன்னதாகவே கண்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கடலூர் அருகே சின்ன காரைக்காட்டையை சேர்ந்த விஜயபாலன் என்பவர் கடலூர் சிப்காட்டில் கண்ராக்டராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் திடீரென பாம்பு ஒன்று வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயபாலன், அந்த பாம்பை விரட்ட முயன்றுள்ளார். ஆனால் பாம்பு வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் அங்கு அடுக்கி வைத்திருந்த செருப்பு மற்றும் 'ஷூ'க்களில் புகுந்து மறைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயபாலன் குடும்பத்தினர், உடனடியாக கடலூரில் உள்ள பாம்புபிடி வீரருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பாம்புபிடி வீரர் செல்லா விரைந்து வந்து. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு செருப்பு மற்றும் ஷூவை எடுத்து அப்புறப்படுத்தி பாம்பு உள்ளதா என்பதை பார்த்தார்.
அப்போது, விஜயபாலனின் மகனான 14 வயதுடைய பள்ளி மாணவனின் 'ஷூ'வுக்குள் பாம்பு பதுங்கி இருந்ததை பார்த்த பாம்பு பிடி வீரர் செல்வா, உடனே பாம்பை பிடிக்க முயன்றார். அப்போது சீறிய நாகப்பாம்பு படமெடுத்து ஆடியது. இதில் சுதாரித்துக் கொண்ட பாம்பு பிடி வீரர், லாவகமாக அந்த நல்ல பாம்பை பிடித்தார். அது 4 அடி நீளமுடைய நல்ல பாம்பை, பத்திரமாக அருகில் உள்ள காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டார். வீட்டுக்குள் நுழைந்த போதே விஜயபாலன் பாம்பை பார்த்ததுடன், 'ஷூ'வுக்குள் பாம்பு புகுவதையும் அவர் கண்டார். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இன்னொரு சம்பவம்: கடலூர் வெளிசெம்மண்டலத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரது வீட்டுக்குள்ளும் நேற்று காலை பாம்பு ஒன்று நுழைந்தது. ஷூக்களை அடுக்கி வைத்திருந்த 'ரேக்'கிற்குள் புகுந்திருக்கிறது.. இதை பார்த்து பதறிய ஜெயராமன், உடனே பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்தார்.. அதன் பேரில் பாம்பு பிடி வீரர் விரைந்து வந்து, ரேக்கை திறந்து பார்த்தார். அப்போது அங்கிருந்த ஜெயராமனின் ஷூவுக்குள் குட்டி பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.
அந்த ஷூவை எடுத்த போது பாம்பு படமெடுத்து ஆடியதை கண்டார். உடனே பாம்பு பிடி வீரர், நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார். அது 2 அடி நீளமுடைய நல்ல பாம்பு என்று கூறினார். அந்த பாம்பை பாம்பு பிடி வீரர் பத்திரமாக காப்புக்காட்டில் விட்டார். 2 ஷூவில் நல்ல பாம்புகள் புகுந்திருந்த வீடியோவும், அதை பிடிக்க முயன்றபோது படமெடுத்து ஆடிய வீடியோவும் கடலூர் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று முன்தினம் கோதுமை நாகம் ஒன்று வீட்டிற்கு புகுந்துள்ளது. அந்த பாம்பு திறந்துகிடந்த சமையல் குக்கருக்குள் சென்று பதுங்கியது. ஐந்து அடி நீளமுள்ள அந்த நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்து காட்டில் விட்டார். மழைக்காலம் என்பதால், காடுகள், புதர்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் உள்ள வீடுகளை நோக்கி பாம்புகள் சர்வ சாதாரணமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பாம்பை கண்டால் பதற்றம் அடையாமல் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிப்பது நல்லது.












Click it and Unblock the Notifications