டூட்டியில் அரசு மருத்துவர் இல்லாததால் கொரோனா நோயாளி பலியான சம்பவம்.. விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது வார்டில் மருத்துவர் இல்லாததால் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது சரிந்து வருவதாக சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. சென்னை, கோவை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் 16,637 பேர் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று மட்டும் கொரோனாவுக்கு 25 பேர் பலியாகிவிட்டனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 35,707 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரிப்பு
தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மகிழ்ச்சியான சம்பவமாகும். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒரு துக்ககரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தாமரை. இவரது கணவர் கோதண்டராமன். இந்த நிலையில் கோதண்டராமனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் செந்தாமரைக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை
அப்போது அவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த 5 ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து செந்தாமரையின் இடத்திற்கு வந்த செவிலியர் அவரது நிலையை கண்டு டூட்டி டாக்டரை அழைக்க சென்றார்.

சிபிஆர் சிகிச்சை
அப்போது அங்கு அவர் இல்லை. மேலும் 20 நிமிடங்களாக அவருடைய போனுக்கு தொடர்பு கொண்டும் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இதனால் பதறிய செவிலியர் சிபிஆர் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தார். அப்போது சிபிஆரின் ஒரு முனையை உறவுக்கார பெண்ணிடமும் மறுமுனையும் செவிலியர் வைத்துக் கொண்டு மார்பு பகுதியில் வைத்து வைத்து சிகிச்சை கொடுத்தனர்.

மருத்துவர் இல்லை
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அவரது மகன் கூறுகையில் 20 நிமிடங்கள் இரவு நேரத்தில் இருந்த டூட்டி டாக்டரை காணவில்லை. எங்கு போனார் என்றும் தெரியவில்லை. செவிலியர் போன் செய்து போன் செய்து ஓய்ந்துவிட்டார். மேலும் என் அம்மாவுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என செவிலியருக்கு தெரியவில்லை. அரசு மருத்துவமனையில் இதுதான் நிகழ்கிறது. மருத்துவர் இருந்திருந்தால் கொரோனாவுக்கு என் தாயை இழந்திருக்க மாட்டேன். ஏற்கெனவே கொரோனாவுக்கு என் தந்தையை பறிகொடுத்துவிட்டேன் என கண்ணீருடன் தெரிவித்தார். பணி நேரத்தில் மருத்துவர் மாயமானது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா
கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதிகம் கட்டணம் ஏற்படுவதாலும் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனை அளவுக்கு தரத்தில் சளைத்ததில்லை என்பதற்காகவும்தான் கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். அப்படியிருக்கும் போது கொரோனா உயிர் கொல்லி என தெரிந்தும் ஒரு மருத்துவர் பணியில் இல்லாமல் போன் செய்தும் எடுக்காமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications