வெளியே பூட்டு.. உள்ளே வகுப்புகள்.. கடலூரில் அரையாண்டு விடுமுறையிலும் செயல்படும் பள்ளிகள்.. விதிமீறல்
கடலூர்: அரையாண்டுத் தேர்வு விடுமுறையின் போது எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்ட போதிலும், அதையும் மீறி கடலூரில் உள்ள பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது.
இதனால் எந்த இடைவெளியும் இல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து படித்து வருவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றன.
இது ஒருபுறம் இருக்க, அரசாங்கம் இவ்வளவு கண்டிப்புடன் கூறிய பிறகும் அதை மதிக்காமல் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எதற்காக விடுமுறை?
பள்ளி மாணவர்கள் ஓராண்டு முழுவதும் படித்து பல்வேறு தேர்வுகளை எழுதுகிறார்கள். இந்த தொடர்ச்சியான பணியில் இருந்து சிறிது ஓய்வு கொடுத்தால் தான், அவர்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். இதற்காகவே, பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழ ஆண்டு என ஒவ்வொரு பருவத்தேர்வுகளின் இடையேயும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விடுமுறைக் காலத்திலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முடிக்காத பாடங்களை முடிப்பதற்காகவும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தயார் செய்யவும் இப்படி விடுமுறைக் காலத்திலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

அரசு உத்தரவு
பள்ளிகளின் இந்த செயலால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதுவே அவர்களின் படிக்கும் ஆர்வத்தை குறைப்பதாகவும் மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில்தான், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்து விடுமுறையும் விடப்பட்டது. இதனைத் தொட்ரந்து, எந்தப் பள்ளியும் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டது.

வெளிப்படையாக விதிமீறல்
ஆனால், அரசின் இந்த உத்தரவை சிறிதும் மதிக்காமல் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடவடிக்கை வேண்டும்
அங்கு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் வழக்கம் போல அரையாண்டு விடுமுறையிலும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதில், சில பள்ளிகளில் மாணவர்கள் வந்தவுடன் பள்ளி கேட் பூட்டப்பட்டு விடுகிறது. வெளியே இருந்து பார்க்கும் போது பள்ளி விடுமுறை என்பது போல காட்டுவதற்காக இந்த ஏற்பாடுகளை நிர்வாகங்கள் செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், "மாணவர்கள் இந்த விடுமுறை நாட்களில்தான் சிறிதளவேனும் மன அழுத்தத்தில் வெளியே வருவார்கள். ஆனால் அந்த விடுமுறை தினங்களிலும் அவர்களை வழக்கம் போல பள்ளிக்கு வரவழைப்பது அவர்களை மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். அரசின் உத்தரவை மீறி இந்த செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.












Click it and Unblock the Notifications