இரவு 10 டூ காலை 6 வரை.. கேட் கீப்பருக்கு இதே வேலை! அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்த பொதுமக்கள்
கடலூர்: செம்மங்குப்பம் ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே பணியில் இருந்த போது ஏராளமான முறை ரயில் வந்த போதே கேட் போடாமல் தவறவிட்டுள்ளதாகவும், இரவு 10 மணிக்கு ரயில்வே கேட்டை மூடிவிட்டு தூங்கிவிடுவார் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ஆச்சாரியா என்ற தனியார் பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை சென்றது. அந்த வழியில் ரயில்வே கேட் ஒன்று இருந்திருக்கிறது. அதனை கடக்க பள்ளி வேன் முயற்சித்த போது, அந்த வழியில் சிதம்பரம் நோக்கி ரயில் சென்றுள்ளது. அந்த ரயில், பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

3 மாணவர்கள் பலி
இதில் தனியார் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, தூக்கி வீசப்பட்டுள்ளது. ரயில் மோதியதில் பள்ளி வேன் சிறிது பறந்து சென்று விழுந்ததில், சுக்கு நூறாக உடைந்திருக்கிறது. இந்த விபத்தில் பள்ளி வேனில் இருந்த 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த பள்ளி வேனில் 4 மாணவர்கள், வேன் ஓட்டுநர் என்று 5 பேர் பயணித்துள்ளனர்.
ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியம்
அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரயில் மோதிய போது காப்பாற்ற முயற்சித்திருக்கிறார். 3 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பங்கஜ் சர்மா கைது
இந்த விபத்து நடந்த பகுதியில் இருந்த ரயில்வே கேட் கீப்பராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா பணியில் இருந்திருக்கிறார். தற்போது பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு ரயில்வே தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்த போது, தாம் கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என்று பள்ளி வேன் ஓட்டுநர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆவேசம்
இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் குவிந்தனர். அப்போது விபத்து தொடர்பாக பொதுமக்கள் பேசுகையில், ரயில்வே கேட் திறந்தே இருந்தது.. திடீரென எங்களுக்கு ஒரு பெரிய சத்தம் கேட்டது.. ஒரு பறவை போல் பள்ளி வேன் பறந்தது.. அவ்வளவு சத்தம்.. எங்களால் அருகிலேயே போக முடியவில்லை. மின்சார வயர்கள் சென்று கொண்டே இருந்தன.
தூங்கிய கேட் கீப்பர்
காப்பாற்ற சென்றவர் மீது மின்சாரம் பாய்ந்தது. செம்மங்குப்பத்தில் 7.30 முதல் 7.35 மணிக்கு அந்த பள்ளி வேன் கடந்து செல்லும். எப்போதும் வர நேரத்தில் கேட் மூடி இருந்தால், பள்ளி வேன் காத்திருந்து செல்லும். இன்று ரயில்வே கேட் மூடப்படவில்லை. அதனால் பள்ளி வேன் கடந்து செல்லும் போது, ரயில் வந்துவிட்டது. சுமார் அரை கிமீ பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டது. அப்போது கேட் கீப்பரை பார்த்தால், தூங்கி கொண்டிருந்தார்.
இரவில் கேட் கீப்பர் சேட்டை
ரயில்வே கேட்டை போடாமல் தூங்கி கொண்டிருந்தார். விபத்து நடந்தது கூட தெரியவில்லை. இதேபோல் 4 முறை ரயில் வரும் போது ரயில்வே கேட் போடப்படாமல் இருந்திருக்கிறது. அதன்பின் கேட் போடாமல் இருக்கிறீர்களே.. கேட் போடுங்கள் என்று மக்கள் கூறி, அதன்பின் ரயில்வே கேட் மூடப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. அதேபோல் இரவு நேரத்தில் கேட்டை மூடிவிட்டு, தூங்கிவிடுவார்கள்.
பள்ளி வேன் ஓட்டுநர் மீது தவறு கிடையாது
விடியும் வரை திறக்க மாட்டார்கள். ஒரு சில நேரத்தில் கேட்டை திறக்காமல் டிபன், டீ சாப்பிட வந்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் கேட்கீப்பரிடம் தான் சென்று அறிவுறுத்துவோம். பள்ளி வேன் ஓட்டுநர் ரயில்வே கேட்டை அவசரமாக கடந்தார் என்பது தவறான தகவல். ரயில்வே கேட் போடாததால், பள்ளி வேன் சென்றிருக்கிறார். கேட் போட்டிருந்தால், மீண்டும் அதனை எளிதாக திறக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications