பள்ளி வகுப்பறையிலேயே விஷம் குடித்த மாணவன்-மாணவி..விசாரணையில் வெளியான ஷாக் தகவல்.. கடலூரில் பரபரப்பு
கடலூர்: கடலூரில் பள்ளியிலேயே மாணவ- மாணவிகள் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீப காலமாகவே பள்ளி மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் மோசமான நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
இதனைத் தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவ- மாணவிகளுக்கு உதவும் வகையில் உதவி மையங்களும் கூட ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

கடலூர்
இதனிடையே கடலூரில் பள்ளி வகுப்பிலேயே மாணவ- மாணவிகள் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூரை அடுத்துள்ள ராமாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்றைய தினம் வழக்கம் போலவே அனைத்து மாணவ- மாணவிகளும் பள்ளிக்கு வந்துள்ளனர்.

விஷம்
நேற்றைய தினம் அங்கு +2 படித்த மாணவர் ஒருவர் கிளாஸ் ரூமிலேயே வைத்து விஷத்தைக் குடித்துள்ளார். மீதி விஷத்தை அவர் தனது பேக்கில் வைத்த நிலையில், அதை அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியும் எடுத்துக் குடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், இது தொடர்பாக உடனடியாக தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

விசாரணை
இதையடுத்து அவர்கள் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில், உயிர்பிழைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதில் விஷம் குடித்த மாணவனும் அந்த மாணவியும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்தது தெரிய வந்தது.

தோல் வியாதி
அந்த மாணவி தனக்குத் தோல் நோய் இருப்பதாகவும் இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மாணவனிடம் தெரிவித்து உள்ளார். இதைக் கேட்டு மனமுடைந்த அந்த மாணவன், காதலி உயிரிழக்கும் முன்பு, தான் உயிரிழந்துவிட வேண்டும் என பள்ளிக்கு விஷத்தை எடுத்து வந்து குடித்துள்ளார். இதைப் பார்த்ததும் அந்த மாணவியும் மீதியிருந்த விஷத்தை எடுத்துக் குடித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் அடுத்தகட்ட விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications