"சிலரின் சூழ்ச்சி.." தமிழையும், ஆன்மீகத்தையும் பிரிக்க ரகசிய முயற்சி! ஆளுநர் தமிழிசை பரபர
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இறைவழிபாடு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குத் தெலுங்கான ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்தார்.
அவரை தீட்சிதர்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜனை அவர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

வழிபாடு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி, சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை அவர் தரிசனம் செய்தார். தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதத்தை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினர். அதைத் தொடர்ந்து, அவர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் மற்றும் நகர எல்லையில் உள்ள தில்லைக்காளியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

சைக்கோதெரபி
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிதம்பரம் நடராஜருக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கோயிலுக்கு வருவது எப்போதும் இன்பமான ஒன்று தான். கோயிலுக்கு வருவதே ஒரு சைக்கோதெரபி தான். மனதில் உள்ள பாரத்தை இங்கே இறக்கி வைத்துவிடுவார்கள். வெளிநாடுகளில் மனநல மருத்துவமனைகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் கோயில்கள் தான் மன நலத்தைப் பேணி காக்கிறது.

பிரிக்க முயற்சி
தமிழையும், ஆன்மீகத்தையும் பிரிக்கும் முயற்சி நடைபெறுகிறது. தமிழும், ஆன்மீகமும் எப்போதும் ஒன்றுதான். ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆண்டாளின் தமிழ் எளியோர்க்கும் எளியவை. படியாய் கிடந்து பவழ வாய் காண்பேனோ என்று பாடியுள்ளனர். சிவனும் எளியோருக்கு எளியனாய் உள்ளார். அதனால் தமிழும், ஆன்மீகமும் ஒன்றோடு, ஒன்று இணைந்தது.

சூழ்ச்சி
ஆன்மீக தமிழ்தான் நமக்குப் பெருமை சேர்த்து வருகிறது. சிலர் சூழ்ச்சியினால், ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்து பரப்ப முயல்கின்றனர். அது முற்றிலும் தவறான ஒன்று. தமிழையும், ஆன்மீகத்தையும் எப்போதுமே பிரிக்க முடியாது. அவை ஒன்றோடு, ஒன்று இணைந்த ஒன்றாகும். புதுச்சேரியில் மின்சார துறை விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவாகும்.

கல்வி
சிபிஎஸ்இ வேண்டாம் எனச் சிலர் தவறாகச் சொல்கிறார்கள். நவேதியா, கேந்திர வித்தியாலயா பள்ளி வேண்டாம் எனச் சொல்லி, சொல்லி மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படிச் சொல்பவர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்து நன்றாகப் படிக்க வைக்கிறார்கள். அப்படி இல்லாமல் அரசுப் பள்ளிகளில் அனைத்து தரமும் உயர்த்த வேண்டும் என்பது நமது எண்ணம்.

விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டேன்
அதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தான் எடுத்து வருகிறோம். கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த சமயத்தில் புதுச்சேரியைப் பாதுகாக்க இரவு, பகலாக உழைத்துள்ளோம். புதுச்சேரி மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே என்னை ஆளுநராக நியமித்துள்ளார்கள். தமிழ் மக்களுக்குச் சேவை செய்து வருவதால் அகமகிழ்ந்துள்ளேன். விமர்சனம் வந்தாலும், அதைக் கண்டுகொள்ள மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications