கடலூருக்கு குட் நியூஸ்.. விருத்தாசலம், ராமநத்தம் 4 வழிச்சாலையில் பயண நேரம் குறையுது.. சல்லுனு போலாம்
கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிக முக்கியமான போக்குவரத்து நரம்பாக விளங்கும் விருத்தாசலம் - ராமநத்தம் சாலை, தற்போது ரூ. 150 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையாகத் தரம் உயர்த்தப்படும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன.. விரைவில் பயணிகளுக்கு குட் நியூஸ் வரப்போகிறதாம்...!!
கடலூர் மாவட்டத்தின் பிரதான சாலையாகக் கருதப்படும் இந்த விருத்தாசலம் - ராமநத்தம் வழித்தடம் வழியாக திருச்சி, கோவை, மதுரை, சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் பயணித்து வருகின்றன..

கடலூருக்கு மெகா குட் நியூஸ்
கடந்த காலங்களில் இந்த 42 கி.மீ., தூரத்தைக் கடக்க ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிட வேண்டிய நிலை இருந்தது.. இதற்குச் சாலையில் உள்ள குறுகிய பாலங்கள் மற்றும் அதிகப்படியான வளைவுகளே முக்கியக் காரணமாக அமைந்தன.. இதனால் திருச்சி - கடலூர் மற்றும் திட்டக்குடி - சென்னை இடையிலான பயண நேரம் அதிகரித்ததோடு, விபத்துகளும் தொடர்க்கதையாகி வந்தன..
ஏற்கனவே இப்பகுதியில் கடலூர் - விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டுப் பயன்பாட்டில் உள்ள நிலையில், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது..
விருத்தாசலம் ராமநத்தம் சாலை
ஆனால், விருத்தாசலம் - ராமநத்தம் சாலை மட்டும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 49 கோடியில் 7 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும், விபத்துகள் குறைந்தபாடில்லை.. சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் இச்சாலை தரம் உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், பணிகள் தொடங்கப்படாமல் தாமதமாகி வந்தது..
நாளுக்கு நாள் அதிகரித்து வந்த விபத்துகளைக் கருத்தில் கொண்டு, இச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்..
முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம்
இதனை தொடர்ந்து முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான அரசாணையும் முறைப்படி வெளியிடப்பட்டது..
தற்போது இப்பணிகள் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. முதற்கட்டமாகத் திட்டக்குடி முதல் அரங்கூர் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 70 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன..
சல்லுனு போலாம்
இதற்காக சாலையோரங்களில் இருந்த புளியமரம், தென்னை மற்றும் புங்கன் உள்ளிட்ட 533 மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வெட்டி அகற்றப்பட்டுள்ளன.. இதில் ஐந்து மரங்கள் மட்டும் இன்னும் வெட்டப்படாமல் மீதமுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
இரண்டாம் கட்டப் பணியாக கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து திட்டக்குடி வரையிலான பகுதிக்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. இதற்கான நில அளவீடு மற்றும் மரங்கள் கணக்கெடுக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் முழுமையாகத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த 4 வழிச் சாலைப் பணிகள் நிறைவடையும் போது திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.. விபத்துகள் பெருமளவு குறைவதோடு, பயண நேரமும் கணிசமாக மிச்சமாகும் என்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்..!!












Click it and Unblock the Notifications