வயசுக்கு வந்த "21 வயது நிஷா".. முகமெல்லாம் வெட்கம்.. மஞ்சள் நீராட்டு விழாவில் திரண்ட கடலூர்.. சபாஷ்
திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா விருதாச்சலத்தில் நடத்தப்பட்டுள்ளது
கடலூர்: 21 வயது நிஷாவுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி உள்ளனர் பெற்றோர்.. ஊரே திரண்டு வந்து, இந்த பூப்புனித நீராட்டு விழாவை பெருமைப்படுத்தியுள்ள சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
Recommended Video
திருநங்கைகள் எனப்படுவர்களுக்கான அங்கீகாரம் நாளுக்கு நாள் சமூகத்தில் உயர்ந்து வருகிறது.. ஒருகாலத்தில் மனிதப்பிறவியாக மதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட இந்த சமூகம், நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று இன்று வீரநடை போட்டு மேலே வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இன்னமும்கூட பல்வேறு பகுதிகளில் திருநங்கையாக அல்லது திருநம்பிகளாக மாறிவிடுபவர்களை முழு மனதுடன் குடும்பத்தார் ஏற்று அங்கீகரிப்பதில்லை..

திருநம்பிகள்
இதனாலேயே குடும்பத்துக்கு பயந்து எத்தனையோ திருநங்கைகள், திருநம்பிகள் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள்.. பிறகு வாழ்வாதாரத்துக்காக எத்தனையோ கஷ்டங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது.. திருநங்கைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து வருகிறது என்பது ஆறுதல் தரக்கூடிய விஷயமாக உள்ளது.. இவர்களில் எத்தனையோ பேர் முட்டி மோதி படித்து, உயர் பதவிகளை அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பது மகிழ்ச்சிதான்.

கொளஞ்சி - அமுதா
ஆனாலும், வீட்டை விட்டு ஓடிப்போனவர்களை குடும்பத்தினர் மீண்டும் அரவணைத்து கொள்வது என்பது அபூர்வமாக உள்ளது.. அப்படி ஒரு சம்பவம்தான் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நடந்துள்ளது. இந்திராநகரில் வசிக்கும் தம்பதி கொளஞ்சி-அமுதா.. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக கொளஞ்சி வேலை பார்க்கிறார்.. விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக அமுதா வேலை பார்த்து வருகிறார்..

கேட்டரிங்
இவர்களின் மகன் நிஷாந்த்.. 21 வயதாகிறது.. டிப்ளமோ கேட்ரிங் முடித்துள்ளார். கடந்த வருடம் முதல்தான் இவருக்கு உடம்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.. இதை பெற்றோரிடமும் சொல்லி உள்ளார்.. ஆனால் அவர்கள் கண்டித்துள்ளனர். ஒருகட்டத்தில் நிஷாந்த் வீட்டை விட்டே ஓடிவிட்டார்.. பிற திருநங்கைகளிடம் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்த விஷயம் கேள்விப்பட்டு பெற்றோர் பதைபதைத்து போய்விட்டனர்.. அதனால், அங்கு சென்று, நிஷாந்த்தை சமாதானப்படுத்தி மறுபடியும் வீட்டுக்கே அழைத்து வந்தனர்..

தடபுடல் விழா
நிஷாந்தின் உணர்வுக்கு மதிப்பளித்து பெயரை நிஷா என்று மாற்றினர்.. அத்துடன் அவர் வீட்டை வெளியேறிய நாளான மார்ச் 1 அன்றே பூப்பருவத்தைக் கொண்டாடும் வகையில், அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த முடிவு செய்தனர். அதன்படியே நேற்றைய தினம் ஊரையே கூட்டி விழா நடத்தினர்.. நிஷாவை அலங்கரித்து மாலை மரியாதையுடன் உட்காரவைத்து மஞ்சள் நீராட்டு விழாவை தடபுடலாக நடத்தினர்.. இந்த நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நிஷாவுடன் படித்த நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..

நெகிழ்ச்சி - பூரிப்பு
விழாவுக்கு வந்திருந்தவர்கள் இதை பற்றி சொல்லும்போது, முதன்முறையாக திருநங்கை ஒருவரை அங்கீகரித்து அவருக்கு விழா நடத்தியிருப்பது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. இது தங்களுக்கு மகிழ்ச்சியே.. பல பெற்றோர்கள் இப்படி மனம் மாறி, தங்கள் பிள்ளைகளை அரவணைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.. தன்னை புரிந்துகொண்ட இப்படிப்பட்ட பெற்றோர், சொந்தபந்தங்கள் கிடைக்க, கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நெகிழ்ந்து சொல்கிறார் நிஷா.. இப்போது நிஷா முகத்தில் வெட்கமும், புன்னகையும் மாறி மாறி தென்பட்டு கொண்டிருக்கிறது..!












Click it and Unblock the Notifications