சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு..தீட்சிதர்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் இன்றும் ஏமாற்றம்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2வது நாளாக அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வுக்காக வருகை தந்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்து இன்றும் தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்: நடராஜர் கோவிலில் 2வது நாளாக அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள வந்தனர். ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்து இன்றும் தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளதால் ஒத்துழைக்க முடியாது எனவும், சட்டப்படி குழு அமைக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு அளிப்போம் எனவும் தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அரசுக்கு புகார்கள் சென்றது.
கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய சென்ற சக தீட்சிதரை தாக்கியது, ஆதிதிராவிட பெண் ஒருவரை சாதி பெயரை சொல்லி திட்டியது, கணக்குவழக்குகளில் முறைகேடு என பல்வேறு புகார்கள் எழுந்தது. இதுகுறித்து தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

ஆய்வு செய்ய குழு அமைப்பு
இதுகுறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஒரு குழுவை அமைத்திருந்தது. இதில் வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன், இந்து சமய அறநிலையத்துறையின் ஆலய நிலங்களுக்கான மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பெரம்பலூர் மாவட்ட உதவி ஆணையர் அரவிந்தன் மற்றும் திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் நேற்று காலை நடராஜர் கோயிலுக்கு ஆய்வு செய்ய வந்தனர். இதையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் எஸ்.பி. அசோக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் குழுவினரை தீட்சிதர்கள் விபூதி பிரசாதம் கொடுத்து வரவேற்று அழைத்து சென்றனர்.

தீட்சிதர்கள் எதிர்ப்பு
பின்னர் கோயில் கனகசபை மீது ஏற்றி சாமி தரிசனம் செய்ய வைத்தனர். இதையடுத்து கோயிலில் ஆய்வுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தீட்சிதர்களின் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடிதம் அளித்த தீட்சிதர்கள்
கோயிலில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் கோயில் நிர்வாகம் குறித்து தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வுக்கு வந்துள்ளதால் ஒத்துழைப்பு அளிக்க முடியாது. சட்டப்படி அமைக்கப்பட்ட குழு வந்தால் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.மேலும் கோயிலில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து 4 பக்க கடிதம் ஒன்றையும் தீட்சிதர்கள் சார்பில் துணை ஆணையர் ஜோதியிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த அதிகாரிகள் குழு கோயில் வளாகத்தில் தரையில் அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் ஆலோசனை
ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே தரையில் அமர்ந்தபடி அதிகாரிகள் குழுவினர் தாங்கள் கொண்டு வந்த பல்வேறு ஆவணங்களை படித்துப் பார்த்தனர். அப்போது கோயில் தீட்சிதர்கள் அதிகாரிகளிடம், கோயில் நடை சாத்தும் நேரமாகி விட்டது என தெரிவித்தனர். கோவிலில் வழக்கமாக காலை 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் ஆதலால் ஆகம முறைப்படி தங்களின் வழிமுறைகளை கடைபிடிக்க ஆய்வுக் குழுவை ஒத்துழைக்கக் கோரி தீட்சிதர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து ஆய்வு குழுவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் 4 மணிக்கு கோயிலுக்கு வருவதாக தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

ஆய்வு உறுதியாக நடக்கும்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில், பொது கோயில் என்றுதான் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பொது கோயில்களில் இருந்து புகார்கள் வரும்போது இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படி ஆய்வு செய்து விசாரிக்கலாம். சிதம்பரம் கோயில் குறித்து எழுந்த புகார்கள் குறித்து, சட்டப்படி ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றனர். எந்த பயமும் இல்லை என்றால் ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதுதான் தீட்சிதர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை. ஆய்வு செய்வது தீட்சிதர்களுக்கு எதிரான செயல் என்றுநினைக்கக் கூடாது. சிதம்பரம் கோயிலை எடுத்துக் கொள்ளும்எண்ணம் எதுவும் அறநிலைத்துறைக்கு இல்லை.

வாக்குவாதம்
5 மணிக்கு மீண்டும் கோயிலுக்கு வந்தனர். கோயிலின் செயலர் ஹேமசபேஷ தீட்சிதர் எங்கே? நாங்கள் அவருக்குதான் ஆய்வு செய்வது தொடர்பாக கடிதம் கொடுத்தோம் என்றனர். அதற்கு அவர் வெளியே சென்றுவிட்டதாகவும் அவர் வந்தாலும் இதே கருத்தைத்தான் தெரிவிப்பார் என்றும் தீட்சிதர்கள் தெரிவித்தனர். ஆய்வு செய்வதை தடுக்க கூடாது என குழுவினர் எச்சரித்தனர். இதற்கு தீட்சிதர்களின் வழக்கறிஞர், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஆய்வு நடத்த முடியாது என பதிலளித்தனர். அப்போது குழுவினருக்கும், தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்றும் ஆய்வு நடக்கும்
இன்றும் ஆய்வு நடைபெறும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டப்படி கோயில் ஆவணங்களை கேட்டும் அவர்கள் காட்டவில்லை. நிர்வாகத்தில் தலையிட கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கான உத்தரவு அவர்களிடம் இல்லை. பொது மக்கள் வழிபடும் கோயிலில் அரசாங்கம் ஆய்வு செய்வதற்கு இடம் உள்ளது. ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை என்றாலும் வெளியே இருக்கும் சொத்துக்கள், கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்தோம். கோயிலில் எந்தெந்த பணிகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தோம். கோயில் உள்ளே மட்டும் ஆய்வு செய்யவில்லை. வெளியில் அனைத்தையும் ஆய்வு செய்தோம். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று வருவாய் நிலங்கள் குறித்து ஆய்வு செய்வோம். கணக்கு வழக்கு விவரங்களை மட்டும் ஆய்வு செய்யவில்லை. இந்த ஆய்வு இன்றும் தொடரும். ஆய்வு முடிந்த பிறகு அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும் என்று கூறியுள்ளார்.

தீட்சிதர்கள் எதிர்ப்பு
இரண்டாவது நாளாக இன்றும் கோவிலுக்கு ஆய்வுக்காக வந்த அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற ஆவணங்களை காண்பித்து கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டத்திற்கு உட்பட்டு சிதம்பரம் கோயிலில் ஆய்வு செய்கிறோம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர். ஆய்வு முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அது குறித்து அமைச்சர் முடிவெடுப்பார் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
