கடலூரில் தங்க நகையை பறித்தவரிடமே.. மாயமான பணம்.. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட்
கடலூர்: கடலூர் மாவட்டம் கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த அம்மணியம்மாள் என்பவர் கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் கீழபுலியூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துவிட்டு ஓடினாராம். இதில் கைது செய்யப்பட்ட பிரபாகரனிடம் இருந்து பறிமுதல் செய்த 75000 பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த புகாரில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் பிருந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த 60 வயதாகும் அம்மணியம்மாள் என்பவர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று வருகிறார். இவர் அண்மையில் கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் கீழபுலியூர் கிராமத்தை சேர்ந்த 39 வயதாகும் பிரபாகரன் என்பவர், அம்மணியம்மாளுக்கு தனது மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுப்பது போல் நடித்தார். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து கடலூர் மாவட்டம் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.75 ஆயிரத்தை கணக்கில் கொண்டு வராமல் ராமநத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிருந்தா கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை கடலூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா, கடந்த 4 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இந்தநிலையில், துறைரீதியான விசாரணை நடந்து வந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பிருந்தா அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டிலும் ஒரு இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், 16 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். அண்மையில் சிறுமி கர்ப்பமானார்.
மருத்துவமனையில் பரிசோதனையில் அவரது வயது 16 என்பது டாக்டர்களுக்கு தெரியவந்தது. இந்நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய பாலக்கோடு மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் , 16 வயதுசிறுமியின் தாயாரிடம் 50 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காவல் அதிகாரிகள், காவலர்கள் லஞ்சம் வாங்கினால் அல்லது முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் முறைப்படி ஆதாரத்துடன் புகார் அளித்தால், அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அப்படித்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications