சாதி மறுப்பு திருமணம்.. பெற்ற மகள் என்றும் பாராமல்.. தாய் செய்த கொடுமை.. நடுநடுங்கிப்போன கடலூர்!
கடலூர்: இந்தியா என்னதான் நவீன தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் சில மக்களின் மனங்கள் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கின்றன.
நமது நாட்டில் நிலவும் சாதிய பாகுபாட்டைதான் சொல்கிறேன். நாட்டின் ஒரு சில இடங்களில் சாதிய கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.

சாதிய கொடுமைகள்
சாதி மறுப்பு திருமணங்கள் செய்த சிலர் அநியாயமாக கொல்லப்பட்ட பல்வேறு சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். ஏன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறி பெற்ற மகள், மகனை கவுரவ கொலை செய்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இவ்வாறு ஒரு சில மக்களிடம் சாதி என்னும் கறை மனதில் அழுத்தமாக பதிந்துள்ளது.

சாதி மறுப்பு திருமணம்
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெண்ணாடம் சோழநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு சுப்புலட்சுமியின் பெற்றோர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டனும், சுப்புலட்சுமியும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

கருக்கலைப்பு மாத்திரைகள்
இந்த நிலையில் மணிகண்டனின் வீட்டில் இருந்த சுப்புலட்சுமியை அவரது தாய் கஸ்தூரி வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மகள் சுப்புலட்சுமி கருவுற்று இருந்ததால் அதனை கலைக்க கஸ்தூரி திட்டமிட்டார். இதனால் சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை மகளுக்கு கொடுத்தார். தாய் சத்து மாத்திரைகள்தான் கொடுக்கிறார் என நம்பி அந்த மாத்திரைகளை சாப்பிட்டார் சுப்புலட்சுமி.

வெளிச்சத்துக்கு வந்தது
இந்த நிலையில் திடீரென சுப்புலட்சுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது கணவர் மணிகண்டன், உறவினர்கள் சுப்புலட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுப்புலட்சுமிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது தாய் கஸ்தூரி கொடுத்தது கருகலைப்பு மாத்திரைகள் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

கைது செய்தனர்
இதனை தொடர்ந்து தாய் மீது பெண்ணாடம் காவல் நிலையத்தில் சுப்புலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் கஸ்தூரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே மகளுக்கு கருகலைப்பு மாத்திரைகள் கொடுத்த சம்பவம் பெண்ணாடம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications