கடலூரே திகைச்சிடுச்சி! குவிந்த போலீசார்.. 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் அதிரடி சோதனை.. காரணம் என்ன?
கடலூர்: கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று 300 க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனால், கடலூரில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளை சோதனை செய்ய டி.ஜி.பி சங்கர் ஜிவால் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி, இன்று கடலூரில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என 300 - க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீசார் திடீரென சோதனையை நடத்தினர்.

கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர். சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ள நபர்களின் வீடுகளில் சோதனையானது நடைபெற்றது. இவர்களின் வீடுகளில் ஏதேனும் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் இந்த சோதனை நடைபெற்றது.
குறிப்பாக கடலூர் தாழங்குடா மற்றும் தேவனாம்பட்டினம் பகுதியில் மட்டும் 40 வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள்... என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் போலீசார் விசாரித்தனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களில் போலீசார் திடீரென விசாரணை மேற்கொண்டது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications