வாயை கொடுத்து சிக்கிய பிரேமலதா.. விருத்தாச்சலத்தில் விழுந்த விரிசல்
கடலூர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். தேமுதிக பிரேமலதா செயல்பாடுகளால் விசிக மற்றும் திமுகவினர் அதிருப்தியடைந்துள்ளனர். விருத்தாச்சலம் தொகுதியிலும் பிரேமலதாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால் பிரேமலதா தன் கணவர் விஜயகாந்த் சென்டிமென்டில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயகாந்த் இருக்கும்போது தேமுதிக வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது.

விருத்தாச்சலம் தொகுதி தேமுதிக பாசம்
2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் முதல்முறையாக விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு 2011 சட்டமன்ற தேர்தலில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் அவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.
உடல்நலக்குறைவு காரணமாக 2021 தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் அமமுக - தேமுதிக கூட்டணி அமைத்தன. பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2026 தேர்தலில் அதே தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கவுள்ளார். பலமான திமுக கூட்டணி, விஜயகாந்த் மீதான பாசம், தொகுதிக்குள் நன்கு பரிட்சயம் போன்றவற்றால் பிரேமலதா எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரேமலதா சர்ச்சை
ஆனால் அவரின் செயல்பாடுகள் திமுகவிலேயே அதிர்ச்சியையும், குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கடலூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்டார். திருமாவளவன் மற்ற வேட்பாளர்கள் பெயரை சொன்னபோது எழுந்து நின்றனர். ஆனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எழுந்து நிற்கவில்லை.
திருமாவளவன் சொல்லும்போது நிற்காத பிரேமலதா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை சொல்லும்போது எழுந்து நின்றார். இது விசிகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பிரேமலதா, திருமாவளவன் பரஸ்பரம் விளக்கம் கொடுத்தும் பஞ்சாயத்து ஓயவில்லை. அதற்குள் மற்றொரு சர்ச்சையில் சிக்கினார்.
திமுக, விசிக அப்செட்
சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை வைத்துக் கொண்டே, ஸ்டாலின் மீது ஒரு குற்றச்சாட்டு தான் வைக்க முடியும். எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பின்மை. இதைத் தவிர எதிர்க்கட்சிகளால் இந்த ஆட்சியில் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது என்று பிரேமலதா பேசினார்.
இது திமுகவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேமலதாவுக்கு திமுகவின் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது விருத்தாச்சலம் தொகுதியிலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள திமுக மற்றும் விசிகவினர் பிரேமலதா மீது அதிருப்தியால் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது அவரின் வெற்றியையும் பாதிக்க வாய்ப்புள்ளது என் கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications