"கேட்டுச்சா".. ஸ்பாட்டுக்கே போய் திருமாவளவன் தந்த மெசேஜ்.. சட்டென கவனிக்கும் பாமக.. தயாராகிறதா திமுக?
கடலூர்: மோடி ஆட்சியில் அதானி என்ற தனி நபரை காப்பாற்ற ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே முடக்கி போடுவது தேச விரோத செயலாகும்.. எதிர்க்கட்சியின் கோரிக்கையின் மீது மோடி அரசு நியாயமான நடவடிக்கை மேற்கொண்டு இருக்குமேயானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும் என்று திருமாவளவன் காட்டமாக கூறியுள்ளார்.
திமுகவுடன் பாமக நெருங்கி வந்த நிலையில், ஒருவேளை திமுகவுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் நிலவி கொண்டே வந்தது.. ஆனால், நெய்வேலி விவகாரம் அப்படி ஒரு எதிர்பார்ப்பையே குலைத்துவிட்டது.
என்எல்சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கடந்த 11-ம் தேதி, முழு அடைப்பு போராட்டத்தை பாமக அறிவித்திருந்தது. எப்படியாவது, இந்த முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது.

பிசுபிசுத்தது
ஆனால், 2 டிஐஜி-க்கள், 10 எஸ்பி-க்கள் தலைமையில் போலீஸ் படையை திமுக அரசு குவித்துவிட்டது.. இதனால் அந்த முழு அடைப்பு போராட்டமே பிசுபிசுத்து போய்விட்டதாக தெரிகிறது.. திமுக அரசை விமர்சிக்காமல், மென்மையான போக்கை கடைப்பிடித்தும்கூட, இப்படி செய்துவிட்டார்களே? என்ற வருத்தம் பாமக மேலிடத்துக்கு இருக்கவே செய்கிறதாம்.. அந்த வருத்தத்தில்தான், "மத்திய அரசை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் திமுக என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்பது ஏன்?" என்று அன்று கேள்வி எழுப்பினாராம் அன்புமணி.. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில், என்எல்சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம் நெய்வேலியில் நடந்தது..

நோ கூட்டணி
இதில், அன்புமணி பேசும்போது, என்எல்சி விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக எதிர்த்திருந்தார்.. குறிப்பாக, "விவசாயத்துறை அமைச்சர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் வைத்து பேச வேண்டும்" என்று அன்புமணி பேசியிருந்தது, ஆளும்கட்சிக்கு பெருத்த அதிர்ச்சியையும் உண்டாக்கி உள்ளதாம்.. பாமக வெளிப்படையாகவே விமர்சித்துள்ள நிலையில், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பிக்க பாமக அச்சாரம் போடுகிறதோ? என்கிற வியூகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான், நேற்றைய தினம் மறுபடியும் திமுகவை சீண்டி உள்ளது பாமக.

தரவுகள்
அக்கட்சி தலைவர் அன்புமணி தன்னுடைய ட்வீட்டில், "தமிழ்நாட்டில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது. வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தரவுகளைத் திரட்டி 3 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டது. ஆனால், இன்னும் 10 நாட்களில் கெடு முடியவிருக்கும் நிலையில் ஆணையம் பணியைத் தொடங்கக்கூட இல்லை" என்று பதிவு செய்துள்ளார்.

முதல் வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வரும் பாமக தரப்பு, திமுக அரசை சாடி வருவதும் கவனம் பெற்று வருகிறது.. அத்துடன், "தமிழ்நாடு அரசு சமூகநீதியில் அக்கறை கொண்ட அரசு என்று கூறிக்கொள்கிறது. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் மட்டும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது" என்று அன்புமணியின் அதிருப்தி வார்த்தைகள், திமுக தரப்பையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. இந்நிலையில், திருமாவளவன் பாமகவின் போராட்டம் கருத்து சொல்லி உள்ளது, அதற்கு மேல் பரபரப்பை கூட்டி வருகிறது.. விசிக தலைவர் திருமாவளவன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பாஜக அரசை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்தார்.

அப்செட்
திருமா பேசியபோது, "மோடி ஆட்சியில் அதானி என்ற தனி நபரை காப்பாற்ற ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே முடக்கி போடுவது தேச விரோத செயலாகும்.. எதிர்க்கட்சியின் கோரிக்கையின் மீது மோடி அரசு நியாயமான நடவடிக்கை மேற்கொண்டு இருக்குமேயானால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும்.. அதை விடுத்து, ராகுல் மீது அவதுாறு வழக்கு, எம்.பி., பதவி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட சதி என்பதையே யூகிக்க முடிகிறது. இதனை கண்டித்து, வரும் ஏப்ரல் 14ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜனநாயகம் காப்போம் என்ற அறப்போராட்டத்திலும் அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து உறுதிமொழி ஏற்க உள்ளோம்.

வலிய குரல்
தென்னிந்திய மாநிலங்களில் பாஜக இனி அமர முடியாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் பாஜகவை துரத்தி அடிக்கும் நிலை ஏற்படும்.. இது கர்நாடக மாநில சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும். வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை மக்கள் தூக்கி எறிவார்கள். என்.எல்.சி., விவகாரத்தில் விவசாயிகளுக்கு மன நிறைவு ஏற்படும் வகையில் திமுக தலைமையிலான கூட்டணிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. என்எல்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அகற்றப்பட வேண்டும் என்று பாமக சொல்வது நடைமுறைக்கு வராத செயல்திட்டம்.. போராட்டங்கள் வாயிலாக பாமக இருப்பதாக தன்னை காட்டிக்கொள்கிறது" என்றார்.

திருமாவளவன்
சமீபநாட்கள்வரை, திமுக கூட்டணியுடன் பாமக இடம்பெற போவதாக தகவல்கள் கசியவும், திருமாவளவன் அலர்ட் ஆனார்.. பாஜக, விசிக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது என்று பலமுறை திருமாவளவன் செய்தியாளர்களிடம் அறிவித்து கொண்டே இருந்தார்.. இந்நிலையில், என்எல்சி விவகாரத்தில் திமுக மீது பாமகவுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியானது, விசிகவுக்கு சாதகமாகி உள்ளது.. அத்துடன், பாமகவின் என்எல்சி போராட்டத்தையே விமர்சித்துள்ளதுடன், திமுகவின் கூட்டணியையும் இன்னொரு முறை உறுதிசெய்து பேசியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications