என்எல்சி விவகாரம்: அரசு பேருந்துகள் மீது தாக்குதல்- 750 வெளி மாவட்ட போலீசார் கடலூரில் குவிப்பு!
கடலூர்: என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டங்களால் கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து 750 போலீசார் கடலூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி அனல் மின் நிலையம் (என்.எல்.சி) (என்எல்சி) 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் இறக்கப்பட்டு ஆக்கிரமிக்கும் பணிகள் நேற்று நடைபெற்றன. இதற்கு விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர். பாமக நிர்வாகிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தி இருந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்ற சாலை மறியல்களின் போது பேருந்துகள் தாக்கப்பட்டன. மொத்தம் 16 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நீடிக்கிறது. சில இடங்களில் சாலைகளில் டயர்களை தீ வைத்து எரித்து வீசியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் இருந்து 750 போலீசார் இன்று கடலூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டங்களின் எஸ்.பி.க்களும் கடலூர் மாவட்ட பாதுகாப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய இருக்கின்றனர்.
இதனிடையே என்.எல்.சி. நிர்வாகத்துக்கு பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின் நிலையங்கள் மற்றும் அவற்றின் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஒன்றிய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்திருக்கிறது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே தங்கள் நிலங்களைக் கொடுத்த மக்களுக்கு இதுவரை உரிய வேலை வாய்ப்புகளோ, அடிப்படை வசதிகளோ செய்து தரப்படாத நிலையில், தங்களின் நிலங்களைத் தர முடியாது என கடந்த 2018ஆம் ஆண்டிலேயே நிலம் எடுப்புத் தொடர்பாக நடந்த கருத்துக்கேட்பு கூட்டங்களில், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இச்சூழலில், சேத்தியாதோப்பு அருகே மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை ஆகிய 3 ஊராட்சிகளிலும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதனை சிறிதும் மதிக்காமல், அப்பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பில், விளை நிலங்கள் கையகப்படுத்த என்.எல்.சி நிர்வாகம் முயன்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வளையமாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல்லாயிரம் ஏக்கரில், நடவு செய்யப்பட்டு, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அதனை பொருட்படுத்தாமல், விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி, நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை மறுப்பது, தமிழர்களுக்கு வேலை வழங்க மறுப்பது, ஏற்கெனவே உள்ள பணியாளர்களை நிரந்தரமாக்க மறுப்பது, பணிப்பயிற்சி மாணவர்களுக்குப் பணி வழங்க மறுப்பது என தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தற்போது நிலங்களை கையகப்படுத்த முயல்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தக் கூடாது. குறிப்பாக, வாழ்வாதார இழப்பு, வேலை மறுப்பு, சூழலியல் அழிப்பு போன்ற காரணங்களுக்காக இத்திட்டத்தை அடியோடு எதிர்க்க வேண்டும். ஏற்கனவே, நிலம் வழங்கியோர்க்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், தற்போது பணியாற்றி வரும் தமிழர்களுக்கு பணி நிரந்தரம், பணி உறுதி ஆகியவற்றை உறுதிப்படுத்த, ஒன்றிய அரசு மற்றும் என்.எல்.சி நிர்வாகத்திடம், தமிழ்நாடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தற்போது, விளைநிலங்களை கையகப்படுத்த முயன்று வரும் என்.எல்.சி நிர்வாகத்தையும், காவல்துறையையும், தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இனி வரும் காலங்களில், விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறி செயல்படுமானால், எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது. முக்கியமாக, நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்று கூறி வரும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு, மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications