'டிமிக்கி கொடுக்க முயன்ற காதலன்' விஷம் குடித்து காதலனை கரம்பிடித்த காதலி. . கடலூரில் நெகிழ்ச்சி!
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் காதலித்துவிட்டு ஏமாற்ற முயன்ற காதலனை விஷம் குடித்து மரணத்தின் இறுதி வரை சென்று காதலி கரம்பிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த பெண் ஆரோக்கிய ஷாலினி.
இவரும் துரவலூர் கிராமத்தை சேர்ந்த அருள்ராஜ் என்ற இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி செல்போனில் இருவரும் பேசி வந்தனர்.

வெளிநாட்டில் வேலை
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அருள்ராஜ் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். வெளிநாட்டில் அருள்ராஜ் வேலை பார்த்து வந்தாலும் ஆரோக்கிய ஷாலினியிடம் ஆரம்பத்தில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அருள் ராஜ் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊருக்கு வந்ததும் காதலி ஆரோக்கிய ஷாலினியிடம் அவர் சரியாக பேசாததாக கூறப்படுகிறது. மேலும் அவர் திருமணம் செய்வதற்காக தான் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்ததாகவும், ஆரோக்கிய ஷாலினியை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை தான் அவர் திருமணம் செய்ய இருந்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணம் செய்ய முடியாது
இதனால் பல ஆண்டுகள் காதலித்து வந்த ஆரோக்கிய ஷாலினிக்கு இது பேரதிர்ச்சியை அளிப்பதாக இருந்துள்ளது. எனினும் தான் ஆசை ஆசையாய் காதலித்து வந்த அருள் ராஜை வேறு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார் ஆரோக்கிய ஷாலினி. இதற்காக அருள் ராஜிடமும் பேசியுள்ளார். ஆனால் அருள் ராஜ் உன்னை திருமணம் செய்ய முடியாது வேறு பெண்னை தான் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆரோக்கிய ஷாலினி மிகவும் கவலையடைந்துள்ளார்.

காதலன் வீட்டு முன்பு விஷம் குடித்தார்
இந்த நிலையில் 'வாழ்ந்தால் உன்னோடு மாண்டால் மண்ணோடு' என்ற படி, காதல் தான் கைகூடவில்லை, மரணமாவது காதலன் வீட்டில் நடக்கட்டும் என்று கூறியபடி, ஆரோக்கிய ஷாலினி காதலன் அருள்ராஜ் வீட்டின் முன்பு விஷம் குடித்தார். இதனால் பதறிப்பான இருவீட்டாரின் குடும்பத்தினரும் ஆரோக்கிய ஷாலினியை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஆரோக்கிய ஷாலினி விஷம் குடித்த சம்பவம் போலீசாருக்கு தெரியவர அவர்கள் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

திருமணம் செய்துகொண்டனர்
மேலும் அருள் ராஜை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் காதலியான ஆரோக்கிய ஷாலினியின் பெருமை குறித்து அவரிடன் எடுத்துக் கூறியுள்ளனர். இதையடுத்து அருள்ராஜும் காதலி ஆரோக்கிய ஷாலினியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கிய ஷாலினி குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து முத்துமாரியம்மன் ஆலயத்தில் உறவினர்கள் முன்னிலையில் அருள்ராஜ்- ஆரோக்கிய ஷாலினி திருமணம் செய்துகொண்டனர். ஏமாற்ற முயன்ற காதலனை விஷம் குடித்து மரணத்தின் இறுதி வரை சென்று காதலி கரம்பிடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications