ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ! யாரை கைது செய்தீர்கள்.. ரிப்போர்ட் கேட்கும் மகளிர் ஆணையம்
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா விவகாரத்தில் டெல்லி காவல் துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடித்த சுல்தான், விஜய் நடித்த வாரிசு, தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன.

அது போல் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்து வெளியான கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் ஹிட்டடித்தது. அது போல் ஹிந்தியில் குட் பாய் என்ற படத்தில் அமிதாப் பச்சனுடன் ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா அரைகுறை ஆடையுடன் லிப்ட் ஒன்றில் நுழைவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
மிகவும் ஆபாசமான அந்த வீடியோ செயற்கை நுண்ணறிவின் மூலம் ராஷ்மிகாவின் முகத்தை அதில் பொருத்தி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ போலியானது என்பது தெரிவதற்கு முன்னர் பலர் ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் இது போல் போலியாக வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமிதாப் பச்சன், ராஷ்மிகாவுக்கு ஆதரவாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த போலி வீடியோ குறித்து பேசுவதற்கே வருத்தமாக இருக்கிறது. உண்மையில் இப்படியான ஒன்று எனக்கு பயத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏஐ தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதால் பலரும் பாதிக்கப்படுகிறர்கள்.
ஒரு பெண்ணாக நடிகையாக எனக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்கும் என்னுடைய குடும்பம், நண்பர்கள், என் நலம் விரும்பிகள் உள்ளிட்டோருக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன். எனக்கு பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ இது போல் ஒன்று நடந்திருந்தால் நான் எப்படி கையாண்டிருப்பேன் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இது போன்று மேலும் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்பு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ராஷ்மிகா தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து வாழ் இந்திய பெண் ஜாரா படேல் என்பவர் இன்ஸ்டாவில் புகழ் பெற்றவர். அவருக்கு 4 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். அந்த பெண் கடந்த மாதம் 9ஆம் தேதி இந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில்தான் அவருடைய முகத்திற்கு பதிலாக ராஷ்மிகாவின் முகத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.
இந்த வீடியோ வைரலான நிலையில் போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார். போலி வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி காவல் துறைக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மல்லிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல் துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நவம்பர் 17ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அது போல் இந்த விவகாரத்தில் இதுவரை யாருயும் கைது செய்யப்படவில்லை. இது மிகவும் தீவிரமான விஷயம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன் வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications