ஹத்ராஸ் நிகழ்வுக்கு தலைவர்கள் இரங்கல்.. ரூ. 2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரண உதவி தொகையினை அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஹி கிராமத்தில் போலே பாபாவின் (Bole Baba) நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்ததால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் நகரவே முடியாத அளவுக்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் வந்தததால் அரசு மருத்துவமனைகள் முழுவதும் உடல்கள் நிரம்பி வழிகின்றது. மருத்துவமனைகள் எங்கும் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. மரண ஓலங்களும், மனித தலைகளுமா காணப்படும் மருத்துவமனைகள் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்தின் போதே, ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். “இந்த விவாதத்திற்கு இடையே எனக்கு ஒரு சோகமான செய்தி எனக்கு கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இறந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்,
பிரதமர் மோடி டவிட்டரில் வெளியிட்ட பதிவில். “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த பயங்கர விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உத்தரப்பிரதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில், “உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் நடந்த இந்த கோர விபத்தால் நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துன்பத்தைத் தாங்கும் சக்தியைக் கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். உள்ளூர் நிர்வாகம் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications