2G, 3G, 4G கட்சிகள்.. வரும் தேர்தல் மகாபாரத போர் போல! குடும்ப அரசியல் குறித்து அமித்ஷா கடும் அட்டாக்
டெல்லி: நமது நாட்டில் 2G, 3G மற்றும் 4 G கட்சிகள் உள்ளன. 2 ஜி என்பது ஊழலை குறிக்கவைல்லை. அது இரண்டு தலைமுறை, 3 தலைமுறை, 4 தலைமுறை கட்சிகள் என்பதை குறிக்கிறது என்றும் வரும் தேர்தல் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான குடும்ப கட்சிகளுக்கும் இடையேயான போர் என்றும் அமித்ஷா பேசினார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே எஞ்சியுள்ளன. தேர்தல் தேதியும் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகின்றன. இதற்காக இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டன.

எனினும், தொகுதி பங்கீட்டின் போது ஏற்பட்ட சிக்கலால் இந்தியா கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் வெளியேறியுள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
தேர்தல் பரபரப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து பாஜக நிர்வாகிகள் 11,500 பேர் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது நாட்டில் 2G, 3G மற்றும் 4 G கட்சிகள் உள்ளன. 2 ஜி என்பது ஊழலை குறிவிக்கவில்லை. அது இரண்டு தலைமுறை, 3 தலைமுறை, 4 தலைமுறை கட்சிகள் என்பதை குறிக்கிறது. நான்கு தலைமுறைகளாக தலைவர் மாறவில்லை. ஏன்? நாட்டில் தகுதி வாய்ந்த இளைஞர்களே இல்லையா? வரும் தேர்தலை மகாபாரத போருடன் ஒப்பிடலாம்.
வர உள்ள தேர்தல் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான மகாபாரதப் போர் போன்றது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான குடும்ப கட்சிகளுக்கும் இடையேயான போராகும். பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஏழைகள் குறித்தும் நாட்டின் வளர்ச்சி குறித்தும் சிந்திக்கிறார். இந்தியா கூட்டணி தலைவர்களோ தங்கள் குழந்தைகளை பிரதமராகவும் முதல்வராகவும் ஆக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications