புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாளை திறப்பு- 21 ஆதீன மடாதிபதிகள் டெல்லி புறப்பட்டனர்!
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.
டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ20,000 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய லோக்சபா, 888 எம்.பிக்கள் அமரக் கூடிய வகையில் விலாசமாக கட்டப்பட்டுள்ளது. புதிய ராஜ்யசபாவில் 384 எம்.பிக்கள் அமரலாம். தற்போதைய எம்பிக்கள் எண்ணிக்கையை விட இது அதிகமாகும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இக்கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். ஆனால் நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் இப்புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல். இதனை வலியுறுத்தி நாளைய திறப்பு விழாவை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இதனிடையே இப்புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். ஆதீனங்கள் பங்கேற்பு தொடர்பாக முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுகையில், புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் ஞாயிறன்று வரலாறு மீண்டும் திரும்பவிருக்கிறது. இந்நாளில் நியாயமான, சமத்துவமான நிர்வாகத்தின் புனித அடையாளமாக விளங்கும் செங்கோலினைப் பிரதமர் பெற்று அதனைப் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவவிருக்கிறார். இதே செங்கோலினை ஆகஸ்ட் 14 அன்று இரவு பல தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவின் முதலாவது பிரதமரான திரு ஜவஹர்லால் நேரு தமது இல்லத்தில் பெற்றுக்கொண்டார்.
நேர்மை என பொருள்படும் செம்மை என்ற தமிழ் வார்த்தையில் இருந்து செங்கோல் என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான தர்மம் மிக்க மடங்களைச் சேர்ந்த உயர்நிலை ஆதினங்களால் இது ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சியில் நியாயத்தைக் குறிக்கும் வகையில் கைகளால் செதுக்கப்பட்ட நந்தியின் உருவம் இடம் பெற்றுள்ளது. மிகமுக்கியமாக செங்கோலைப் பெறுவது என்பது நீதியோடும், நேர்மையோடும் ஆள்வதற்கான ஆணையாக இருக்கும். மக்களுக்கு சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதனை ஒருபோதும் மறக்கலாகாது.
இந்த செங்கோல், 1947-ல் இருந்து மக்களவையில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதானமாகத் தெரியும் வகையில், மாண்புமிகு பிரதமரால் நிறுவப்படும். நாட்டு மக்கள் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இது சிறப்புமிக்க தருணங்களில் வெளியே கொண்டுவரப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க "செங்கோலினை" நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான, புனிதமான இடம் நாடாளுமன்றமாகும்
ஆதீனத் தலைவர்களின் கலந்தாலோசனையுடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புனிதமான சடங்கின் போது தங்களின் ஆசிகளைப் பொழிவதற்காக ஆதீனங்களின் தலைவர்கள் இந்தப் புனிதமான விழாவில் பங்கேற்கவுள்ளனர். இவர்களுக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications