பதற வைக்கும் "ரிப்போர்ட்".. இந்தியாவில் தினமும் 5500 குழந்தைகள்.. புகையிலை பழக்கத்துக்கு அடிமை.. ஷாக்
அனைத்து கெட்ட பழக்கங்களையும், கெட்ட வார்த்தைகளை அடிக்கடி பேசுபவனே கதாநாயகன் என்பதை போல, இப்போதைய திரைப்படங்களில் காட்டப்படுகிறது.
டெல்லி: இந்தியாவில் தினமும் 5,500 குழந்தைகள் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாவதாக வெளியாகியுள்ள புள்ளிவிவரம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட தீவிர புகையிலை பழக்கத்துக்கு ஆளாகி வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.
இளைய சமுதாயம் இப்படியொரு பேரழிவை நோக்கி செல்வதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ரகசியம் காத்த பெரியவர்கள்
ஒரு காலத்தில், அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட சிகரெட் உள்ளிட்ட புகையிலை பழக்கங்களை பெரியவர்களே ரகசியமாக வைத்திருந்தனர். சிலருக்கு தங்கள் தந்தை புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பது கூட பல ஆண்டுகளுக்கு பிறகு பிறர் மூலமாகவே தெரியவரும். மிகப்பெரிய தீய பழக்கத்துக்கு நாம் அடிமையாகிவிட்டோம்.. இதை அறிந்தால் நம் பிள்ளைகளும் கெட்டுப் போய்விடுவார்கள் என நினைத்தே அவர்கள் அதை ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், இன்றோ பள்ளி மாணவன் சீருடையில் வந்து சர்வசாதாரணமாக சிகரெட்டையும், மதுபானங்களையும் வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

ஹீரோயிசம்..
இதற்கு திரைப்படங்களும் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அனைத்து கெட்ட பழக்கங்களையும், கெட்ட வார்த்தைகளை அடிக்கடி பேசுபவனே கதாநாயகன் என்பதை போல, இப்போதைய திரைப்படங்களில் காட்டப்படுகிறது. இதை பார்க்கும் சிறார்களுக்கு என்ன தோன்றுகிறது.. நாமும் இப்படி இருந்தால்தான் நம்மையும் ஹீரோ போல பிறர் பார்ப்பார்கள் என்ற தவறான எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதுவே, அவர்களை போதை வஸ்துகளுக்கு அடிமையாக்கி விடுகின்றது.

அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்நிலையில்தான், இந்தியாவின் தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட முதன்மை விசாரணை அதிகாரி நரேஷ் புரோகித் ஒரு அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உலகிலேயே அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 26 கோடியே 80 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள். இளைஞர்களும், படிப்பறிவு இல்லாதவர்களும் பீடி, ஹுக்காவுக்கு பதிலாக சிகரெட்டுகளுக்கு மாறியிருக்கிறார்கள். மேல்தட்டு மக்களோ, சிகரெட்டுக்கு பதில் சிகாருக்கு மாறிவிட்டனர். ஆனால் சிகாரில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் அதிக அளவில் இருக்கிறது.

தினமும் 5,500 குழந்தைகள்..
இந்தியாவில் தினமும் 5,500 குழந்தைகள் (16 வயதுக்கு உட்பட்டவர்கள்) புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். புகையிலை என்றால் சிகரெட் மட்டுமல்ல. வாயில் போட்டு மெல்லும் புகையிலைகளும்தான். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், ஆஸ்துமா போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். புகைப்பிடிப்பதால் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்க்கின்றன. புகைப்படிப்பவர்களுக்கு அருகில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். புகையில்லா புகையிலையை பயன்படுத்துவதால் 35 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இவ்வாறு நரேஷ் புரோகித் கூறினார்.












Click it and Unblock the Notifications