7 மாஜி முதலமைச்சர்கள்.. மோடியின் புதிய அமைச்சரவையில் 7 முன்னாள் சி.எம்கள்.. யார் யார் தெரியுமா?
டெல்லி: மோடி தலைமையில் அமைந்துள்ள புதிய மத்திய அமைச்சரவையில் 6 முன்னாள் முதலமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார் என பார்க்கலாம்..
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து புதிய அரசு இன்று பதவியேற்றது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் மோடி. அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில், மோடியையும் சேர்த்து 7 மாநில முன்னாள் முதல் அமைச்சர்கள் உள்ளனர். குஜராத் மாநில முதல்வராக இருந்து 2014ல் பிரதமரானார் மோடி. தற்போது 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
குமாரசாமி: மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். பாஜக, கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் மஜத தலைவர் குமாரசாமிக்கு கேபினட் அமைச்சர் பதவி அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகன் குமாரசாமி. 1996ஆம் ஆண்டில் அரசியலில் அடியெடுத்து வைத்த குமாரசாமி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வாகினார். ஒன்பது முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ள குமாரசாமி, ஆறு முறை வெற்றி பெற்றிருக்கிறார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு மிகவும் நெருக்கமான தலைவரான வெங்கரமனே கவுடாவை 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், முதல் முறையாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ராஜ்நாத் சிங்: பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் மீண்டும் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ராஜ்நாத் சிங் 1964 ஆம் ஆண்டு முதல் தனது 13 ஆம் வயதிலிருந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டராக இருந்தவர். 1977ல் முதல் முறையாக உ.பி மாநிலம் மிர்சாபூர் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
1991ல் உ.பி மாநிலத்தில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்தார். 1997 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று உத்தரப் பிரதேச பாஜகவின் தலைவராக ஆனார். உத்தர பிரதேச மாநிலத்தில் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார் ராஜ்நாத் சிங்.
மோடி தலைமையிலான முந்தைய மத்திய அரசில் அமைச்சராக இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த போது ராஜ்நாத் சிங் பொறுப்பு பிரதமராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை பொறுப்பு பிரதமராக இருந்த ராஜ்நாத் சிங், மகராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரை செய்தார்.
சிவராஜ் சிங் சவுகான்: மத்திய பிரதேசத்தில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்தவர் சிவராஜ் சிங் சவுகான். பாஜக சார்பில் நீண்டகால முதல்வராக இருந்தவர் சிவராஜ் சிங் சவுகான் தான். சில மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் மோகன் யாதவ் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டார். சிவராஜ் சிங் சவுகான் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
விதிஷா தொகுதியில் போட்டியிட்ட சிவராஜ் சிங் சவுகான், 11,16,460 வாக்குகள் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் 2020 வரை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய துணைத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார் சிவராஜ் சிங் சவுகான்.
மனோகர் லால் கட்டார்: ஹரியானா மாநில முதலமைச்சராக செயல்பட்டவர் மனோகர் லால் கட்டார். ஹரியானாவின் முதல் பாஜக முதல்வர் இவர் தான். கடந்த மார்ச் மாதம் ஹரியானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கட்டார். அங்கு நயாப் சிங் சைனி தற்போது முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கர்னால் தொகுதியில் போட்டியிட்ட கட்டார் 2,32,577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து மோடியின் 3வது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார் மனோகர் லால் கட்டார்.
ஜித்தன் ராம் மஞ்சி: பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜித்தன் ராம் மஞ்சி, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சித் தலைவர். காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்துள்ள ஜித்தன் ராம் 2015ல் தனிக்கட்சி தொடங்கினார். தற்போது அவர் மத்திய அமைச்சர் ஆகியுள்ளார்.
2014 பொதுத்தேர்தலில் பீகாரில் ஜேடியு கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சுமார் ஓராண்டு காலம் மஞ்சி, பீகார் முதல்வராக பணியாற்றினார். பின்னர் நிதிஷ் குமார் முதல்வர் பதவிக்கு வருவதற்காக ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் மஞ்சி. ஆனால், அவர் ராஜினாமா செய்ய மறுத்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை ராஜினாமா செய்தார் மஞ்சி. அதன் பிறகு, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியைத் தொடங்கினார். நடந்து முடிந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் கயா தொகுதியில் போட்டியிட்டு வென்றார் மஞ்சி.
சர்பானந்த சோனாவால்: சர்பானந்த சோனாவால், மோடியின் முதல் அரசில் சில காலம் மத்திய அமைச்சராக இருந்தார். சர்பானந்த சோனாவால் 2011க்குப் பின்னர் அசாம் கன பரிசத் கட்சியிலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்.
2016-ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். பின்னர் ஹிமந்த பிஸ்வா சர்மா வரவால் ஓரங்கட்டப்பட்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு, அவர் அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் மோடியின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் திப்ருகர் தொகுதியில் போட்டியிட்டு 2,79,321 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications