Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய கப்பல்கள்.. இந்தியாவில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு? பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் ரஷ்யா பக்கம் திரும்பினாலும் கூட அதில் எதாவது சிக்கல் ஏற்பட்டு தடை ஏற்பட்டால் பெரிய பிரச்சனையாகும். மத்திய கிழக்கு போர் வாரக் கணக்கில் நீடித்து கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டால் அது பெரிய பிரச்சனையாக மாறும்! எரிபொருள் விற்பனைக்குக் கூட கட்டுப்பாடுகள் வரலாம் என்கிறார்கள். இது குறித்து நாம் பார்க்கலாம்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் 7வது நாளாகத் தொடர்கிறது. இந்த இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. அந்த வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஏறக்குறைய முடங்கிவிட்டது என்றே சொல்லலாம். கிழக்கு-மேற்கு திசை கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 86% சரிவு ஏற்பட்டு, உலக எரிசக்தி சந்தைகளை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

700 Tankers Stuck in Hormuz Jam Fuel shortage in India will be a problem Amid Israel Iran Crisis

பாதிப்பு

கடந்த மார்ச் 1ம் தேதி 2.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற மூன்று டேங்கர்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன. வழக்கமாக அங்குத் தினசரி 19.8 மில்லியன் பேரல்கள் செல்லும் சூழலில், இது 86% சரிவாகும். மார்ச் 2ம் தேதி ஒரு சிறிய டேங்கரும், ஒரு சரக்குக் கப்பலும் மட்டுமே இப்பகுதி வழியாகப் பயணித்தனர். சுமார் 706 ஈரானியர் அல்லாத டேங்கர்கள் ஜலசந்தியின் இருபுறமும் குவிந்துள்ளன. இதில் 334 கச்சா எண்ணெய், 109 டேங்கர்கள், 263 எரிபொருள் டேங்கர்கள் அடங்கும். மேலும் 26 டேங்கர்கள் வளைகுடாவிற்குள் எங்குச் செல்வதென்றே புரியாமல் அலைந்து கொண்டு உள்ளன. நூற்றுக்கணக்கான பிற கப்பல்கள் ஓமான் வளைகுடாவில் காத்திருக்கின்றன.

கச்சா எண்ணெய்

இந்த நிலை, எண்ணெய் சந்தைகளில் உடனடி பாதிப்பை ஏற்படுத்தியது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் சுமார் 10% உயர்ந்து பேரலுக்கு $84ஐ எட்டியது. சவுதி அரேபியாவின் ராஸ் டானுரா சுத்திகரிப்பு ஆலை மற்றும் கத்தார் LNG ஆலையில் நடந்த தாக்குதல்களால் எரிவாயு விலை 40% க்கும் அதிகமாக உயர்ந்தது. அங்கு ஏற்பட்டுள்ள டிராபிக் மேலும் சில நாட்கள் நீடித்தாலும் கூட சர்வதேச எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் சீர்குலையும்.

இதுவே சிக்கலான விஷயம். ஏற்கனவே ஹார்முஸ் ஜலந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் பகுதிக்குச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கான சரக்குக் கட்டணங்களும், பிரீமியங்களும் அதிகரித்து, இதுவும் கூட உலக எரிபொருள் விலைகளை நேரடியாக உயர்த்திவிடும். இந்த சீர்குலைவு வாரக்கணக்கில் நீடித்தால், அதன் விளைவுகள் மிக மோசமானதாக மாறிவிடும்..

ஆசிய மார்கெட்

நிலைமை சமாளிக்க ஏற்கனவே ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் மாற்று வழிகளை ஆராய ஆரம்பித்துவிட்டன. இதில் வளைகுடா கச்சா எண்ணெய்யை நம்பியுள்ள சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தான் உடனடி பாதிப்பை எதிர்கொள்கின்றன. இந்திய அதிகாரிகள் அவசரக்கால நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகின்றனர். விநியோக சிக்கல் நீடித்தால், உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க பெட்ரோல், டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது, ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது, LPG பங்கீடு போன்ற நடவடிக்கைகளைக் கொண்டு வருவது குறித்து இந்தியா பரிசீலிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மாறிவரும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் நாட்டில் முக்கிய பெட்ரோல், டீசல் சப்ளை பாதிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுப்போம் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குச் சிக்கல்

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சிக்கலான சூழலில் இருக்கிறது. நாம் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அதைச் சுத்திகரித்து மீண்டும் ஏற்றுமதி செய்கிறோம். பெட்ரோல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், டீசல் உற்பத்தியில் கால் பங்கையும் ஏற்றுமதி செய்கிறது. ஆனால், LPG மிக எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இந்தியா தனது LPG தேவைகளில் 80-85% இறக்குமதி செய்கிறது, இதில் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது. ஏற்றுமதிகளை நிறுத்திவிட்டாலும் கூட, தற்போதைய கையிருப்பு இரண்டு வாரப் பயன்பாட்டிற்குக் கூட போதாது என்று சொல்லப்படுகிறது.

கட்டுப்பாடுகள்

இந்தியன் ஆயில், ஹெச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் போன்ற அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களின் சில மையங்களில் வசதிகளில் LPG உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள் மற்றும் சேமிப்பகங்கள் என எல்லாவற்றையும் சேர்த்தால் கூட நமது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பு சுமார் 74 நாட்கள் மட்டுமே வரும். எனவே, இந்த மோதல் ஓரிரு வாரங்களில் முடிந்தால் இந்தியாவுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், டிரம்ப் சொன்னது போல வாரக் கணக்கில் நீடித்தால் எரிபொருள் கையிருப்பை இறுதி செய்ய இந்தியா சில கடுமையான முடிவுகளைக் கூட எடுக்க வேண்டி வரலாம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+