மாநிலங்களில் 73,00,166 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு
டெல்லி: நாட்டின் மாநிலங்களில் 73,00,166 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கொவிட் தடுப்பூசி போடுவதை விரைவு படுத்துவதிலும், நாடு முழுவதும் விரிவுபடுத்துவதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
கொவிட் தடுப்பூசியின் புதிய திட்டம் 2021 ஜூன் 21ம் தேதி தொடங்கியது. அதிக தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதன் மூலம் தடுப்பூசி போடும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசிகள் இலவசம்
தடுப்பூசி போடுவதை சிறப்பாக திட்டமிடுவதற்கும், தடுப்பூசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், தடுப்பூசி கிடைக்கும் நிலவரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கொவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது.

32.13 கோடி கொரோனா தடுப்பூசிகள்
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி போடும் புதிய திட்டத்தின்படி, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இது வரை மத்திய அரசு 32.13 கோடி (32,13,75,820) தடுப்பூசிகளை இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமாகவும் வழங்கியுள்ளது.

கையிருப்பில் 73 லட்சம் தடுப்பூசிகள்
இவற்றில் இன்று காலை 8 மணி வரை, வீணாண தடுப்பூசிகள் உட்பட 31,40,75,654 டோஸ்கள் காலியாகியுள்ளது. 73 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் டோஸ்கள் (73,00,166) இன்னும் போடுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மிச்சம் உள்ளன. அடுத்த 3 நாட்களில், 24,65,980 தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெறவுள்ளன.

இதுவரை 33 கோடி பேருக்கு தடுப்பூசி
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 44,33,853 முகாம்களில் 33,28,54,527 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 36,51,983 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரிசோதனை
கடந்த 24 மணி நேரத்தில் 19,60,757 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,01,00,044 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.69 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.34 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 23 நாட்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம்
நாட்டில் 48-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 23 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாக, 2.34 சதவீதமாக பதிவாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.77 சதவீதமாகும். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications