ஆட்சி கவிழ்ப்பு, கிளர்ச்சி... யுத்த களமான சிரியா.. தத்தளித்த 75 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு!
டெல்லி: சிரியாவில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் அந்நாட்டில் இருந்து 75 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கின்றனர். சிரியாவில் இருந்து அனைவரும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களில் 44 பேர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். லெபனானில் இருந்து இந்தியாவுக்கு அனைவரும் அழைத்து வரப்பட உள்ளனர்.
2011-ம் ஆண்டு அரபு நாடுகளை ஆட்டுவித்த அரபு வசந்த காலத்திலேயே சிரியாவும் பிரச்சனைகளை எதிர்கொண்டது. காலம் காலமாக தொடர்ந்த அசத் ( பஷர் அல் அசத்) குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இந்த கொந்தளிப்பை கூர்மைப்படுத்தியது அரபு வசந்தம். அதேநேரத்தில் அதிபர் பஷர் அல் அசத், சர்வாதிகாரியாகவும் செயல்பட்டார். இதனை ஒரு தரப்பு மக்கள் எதிர்த்தாலும் இன்னொரு தரப்பு ஆதரித்தது.

சர்வதேச அரங்கில் ஈரானுக்கு சிரியா மிகவும் அவசியமான ஒரு நாடாக இருந்தது. லெபனானில் ஈரான் உருவாக்கிய ஹிஸ்புல்லா படையினருக்காக இந்த உறவு அவசியமானதாக இருந்தது. சிரியாவும் ஈரான் மற்றும் ரஷ்யா நாடுகளை நம்பிய ஒரு தேசமாகவே இருந்தது.
இந்த நிலையில்தான் சிரியாவில் கிளர்ச்சி குழுவின் கைகள் திடீரென ஓங்கின. ஒட்டுமொத்த நாடும் கிளர்ச்சி குழு வசமானது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த அசத் குடும்பத்தின் சர்வாதிகாரமும் முடிவுக்கு வந்தது. அதிபர் அசத், சிரியாவை விட்டே தப்பி ஓடினார். அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது என ஒரு தகவல் வெளியானது; ஆனால் ரஷ்யாவில் தஞ்சமடைந்துவிட்டார் என்கின்றன மற்றொரு தகவல்.
சிரியாவில் ஏற்பட்ட இந்த குழப்பத்தால் அங்கு இருந்த வெளிநாட்டவர் பாதுகாப்பு கேள்விக்குறியானது. சிரியாவில் இருந்த இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ், லெபனான் தலைநகர் பெய்ரூட் ஆகியவற்றில் உள்ள இந்திய தூதரகங்கள் இணைந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் முதல் கட்டமாக தற்போது 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இருந்து லெபனானின் பெய்ரூட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். அனைவரும் பெய்ரூட் நகரில் இருந்து டெல்லிக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications