75வது சுதந்திர நாள்.. இனி இரவிலும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
நமது வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002 திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை பகலில் மட்டுமல்லாது இரவிலும் பறக்க விடலாம் எனவும் எந்திரத்தால் செய்த தேசியக்கொடியை ஏற்றவும் பாலியஸ்டர் தேசியக்கொடியை பயன்படுத்தி வீடுகளில் கொடியேற்றலாம் எனவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நமது தேசியக்கொடியை சூரிய உதயத்தில் இருந்து பறக்க விடலாம், சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக இறக்கி விட வேண்டும். இதுதான் சட்ட நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 75ஆவது சுதந்திர தின விழா, நடப்பாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பவள ஆண்டு என்பதால், கோலாகலமாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் மத்திய அரசு இதனை கொண்டாடி வருகிறது.

தேசியக்கொடி
அதன் ஒருபகுதியாக, இரவிலும், பகலிலும் தேசியக் கொடி பறக்க விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசியக்கொடியை காலை 7:30 மணி முதல் ஏற்றலாம், மாலை 6:00 மணிக்குள் இறக்கி விட வேண்டும். தேசியக் கொடியை கைகளால், காதி துணியில்தான் தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அதன் விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்து இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பாலியஸ்டர் தேசியக்கொடி
நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசியக்கொடிக்கும், பாலியஸ்டர் தேசியக்கொடிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. இப்போது இதிலும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தேசியக்கொடி கைகளால் செய்யப்பட்டதாக இருக்கலாம் அல்லது எந்திரத்தால் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். அது பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, பட்டு காதி ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை செயலாளர்
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வருகிற பல்வேறு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த தகவல்களை பரப்பி விட வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வீடு தோறும் மூவர்ணக்கொடி
நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திரதினம் 'ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ்' என்ற பெயரில் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு 'ஹர் கார் திரங்கா' எனப்படும் வீடுதோறும் மூவர்ணக்கொடி என்ற இயக்கத்தை அறிவித்தது.

தேசியக்கொடி ஏற்றுவதில் மாற்றங்கள்
இதன்படி ஆகஸ்டு 13ஆம் தேதி முதல் 15ஆம்தேதிவரை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தருணத்தில்தான், தேசிய கொடி பறக்கவிடுவது தொடர்பான மாற்றங்களை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications