திடீர் ஏற்றம்.. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா கேஸ்கள் 44% உயர்வு.. 781 பேருக்கு ஓமிக்ரான்
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை நாட்டில் 781 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நவ. 27ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் உருமாறிய கொரோனா உலகை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பிய உலகை, மீண்டும் லாக்டவுன் படலத்தில் தள்ளிவிட்டது இந்த ஓமிக்ரான். உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

இந்தியா
இந்தியா மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குப் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கூட, ஓமிக்ரான் பரவலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கர்நாடக மாநிலத்தில் முதலில் இருவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. அதன் பிறகு டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் என அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களிலும் ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டது.

ஓமிக்ரான் உயர்வு
இந்தியாவில் நேற்றைய தினம் 653 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இன்றைய தினம் அந்த எண்ணிக்கை 781ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாகத் தலைநகர் டெல்லியில் 238 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மகாராஷ்டிராவில் 167 பேருக்கு ஓமிக்ரான் கேஸ்கள் உறுதியாகியுள்ளது.

புதிய கொரோனா கேஸ்கள்
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 9,195 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 6,358 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்றைய தினம் வைரஸ் பாதிப்பு 44% அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு வேக்சின் பணிகளையும் வேகப்படுத்தியுள்ளது.

கொரோனா வேக்சின்
நாட்டில் இதுவரை 143 கோடி கொரோனா வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.4%ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 7,347 பேர் ஓமிக்ரானில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 3.42 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
ஒட்டுமொத்த பாதிப்பில் தற்போது 0.22% ஆக்டிவ் கேஸ்களாக உள்ளது. அதாவது நாட்டில் 77,002 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 45 நாட்களாக பாசிட்டிவ் விகிதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தற்போது அது 0.78% ஆக உள்ளது. சுமார் 3 மாதங்களாகவே பாசிட்டிவ் விகிதம் 2% கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

உலக சுகாதார அமைப்பு
டெல்டா கொரோனாவை காட்டிலும் ஓமிக்ரான் பாதிப்பு வேகமாகப் பரவுவதாகவே உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு உலகெங்கும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 11% வரை அதிகரித்துள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உலக நாடுகள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications