சாதிச்சுட்ட மாறா.. 600 மின்னஞ்சல், 80 கால்கள்.. விடா முயற்சியால் உலக வங்கியில் பணி.. அசத்திய இளைஞர்
டெல்லி: ஒரு இளைஞர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வேலைவாய்ப்புக்காக 600 மின்னஞ்சல், 80 கால்கள் என தனது தொடர் விடா முயற்சியால் இந்திய இளைஞர் ஒருவர் உலக வங்கியில் பணிக்கு சேர்ந்து அசத்தியுள்ளார்.
கடின உழைப்பு ஒருபோதும் வீண் போகாது, வெற்றிக்கு வேறு குறுக்கு வழிகள் கிடையாது என்ற சொல்லாடல் உண்டு.
இதை மெய்பிக்கும் வகையில்தான் வத்சல் நகதா என்ற இளைஞரின் வேலை தேடும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
எழுதவும் தெரியாது, படிக்கவும் முடியாது.. இருந்தாலும் டாப் மார்க்.! குறைபாடுகளை கடந்து சாதித்த இளைஞர்

எப்படி சாதிக்க முடிந்தது
600 மின்னஞ்சல்கள் மற்றும் 80 தொலைபேசிகள் என வேலைக்காக பெரும் போராட்டம் நடத்திய வத்சல் நகதா, இறுதியில் உலக வங்கியில் வேலை பெற்று அசத்தியுள்ளார். வேலை தேடி, தான் பட்ட கஷ்டங்களையும் இறுதியில் தனது விடா முயற்சி மூலம் எப்படி சாதிக்க முடிந்தது என்பது குறித்தும் லிங்க்ட் இன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

யேல் பல்கலைக்கழகத்தில்
கொரோனா உச்சம் தொட்டு இருந்த 2020 ஆம் ஆண்டுதான் யாலே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நான் எனது பட்டப்படிப்பை நிறைவு செய்தேன். அந்த சமயத்தில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தன. ஏனென்றால், மோசமான நாட்கள் வரும் என அச்சத்தில் அதை எதிர்கொள்ள இந்த நிறுவனங்கள் தயாராகி கொண்டு இருந்தன. எனக்கு வேலையும் இல்லை. இரண்டு மாதங்களில் நான் பட்டத்தையும் நிறைவு செய்ய இருந்தேன்.

வேலை இல்லாமல் இந்தியா திரும்பக்கூடாது
யேல் பல்கலைக்கழக்த்தில் தான் மாணவராக இருந்தேன். இங்கு ஒரு வேலையை பெற முடியாவிட்டால் யேல் பல்கலைக்கழகம் வந்ததில் என்ன பயன் என்று நான் நினைத்தேன். எனது பெற்றோரிடம் பேசுவதற்கு கூட சங்கடமாக உணர்ந்தேன். வேலை இல்லாமல் இந்தியாவுக்கு திரும்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனது முதல் சம்பளம் டாலரில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களை அளிக்கும் நிறுவனங்களில் பதிவு செய்வதை முற்றிலுமாக தவிர்த்தேன்.

600 க்கும் மேலான மின்னஞ்சல்கள்
இரண்டு மாதங்களில் 1,500-க்கும் மேற்பட்ட கனெக்ஷன் ரெக்யூஸ்ட்களை கொடுத்தேன். 600 க்கும் மேலான மின்னஞ்சல்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட முறை போன் செய்து வேலை வாய்ப்பு பற்றி விசாரித்தேன். இறுதியில் இது எனக்கு கை கொடுத்தது. மே மாதம் முதல் வாரத்தில் 4 வேலை வாய்ப்புகள் வந்தது. அதில் உலக வங்கி பணியை நான் தேர்வு செய்தேன். எனது கதையை பகிர்வதன் நோக்கமே, யாரும் ஒருபோதும் முயற்சியை கைவிட்டு விடக்கூடாது என்பதே ஆகும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் நல்ல நாட்கள் நிச்சயம் வரும்'' என்று பதிவிட்டுள்ளார்.