ரேஷனில் இலவசம்.. இலவசம்.. 81.3 கோடி மக்களுக்கு மத்திய அரசு புத்தாண்டு பரிசு.. அட சூப்பர் முடிவு!
டெல்லி: புத்தாண்டு பரிசாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தை இணைத்து இந்தியாவில் அடுத்த ஓராண்டுக்கு அதாவது 2023 டிசம்பர் வரை 81.3 கோடி ஏழை மக்களுக்கு ரேஷனில் இலவச உணவு தானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் அட்டைகள் மூலம் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு, மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
மத்திய அரசு சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தில் பயன்பெறும் குடும்பங்களுக்கு மாதத்துக்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. அதோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ரூ.3க்கு ஒரு கிலோ அரிசி, ரூ.2க்கு ஒரு கிலோ கோதுமை ரூ.1க்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.

கொரோனாவுக்கான சிறப்பு திட்டம்
இதற்கிடையே தான் இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தை தொடங்கியது. இதன்மூலம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட ரேஷனை விட 2 மடங்கு கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரேஷன் அட்டையில் பெயர் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இது கடந்த 28 மாதமாக நடைமுறையில் இருந்தது. இந்த திட்டத்துகான காலஅளவு தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்த நீட்டிக்கப்பட்ட காலம் என்பது டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

2023 வரை நீட்டிப்பு
இந்நிலையில் தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிப்பு செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதாவது நாட்டில் உள்ள 81.3 கோடி ஏழை மக்களுக்கு 2023 டிசம்பர் மாதம் வரை அடுத்த ஓராண்டுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது. நாட்டின் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு புத்தாண்டு பண்டிகை காலத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புத்தாண்டு பரிசாக இந்த அறிவிப்பை மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார்.

ரூ.2 லட்சம் கோடி திட்டம்
இதுபற்றி பியூஷ் கோயல் கூறுகையில், ‛‛தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்மூலம் அடுத்த ஓராண்டு வரை இலவச உணவு தானியம் வழங்கப்பட உள்ளது. இந்த இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கான முழு சுமையையும் மத்திய அரசு ஏற்கும். இத்திட்டத்திற்காக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி செலவாக உள்ளது. டிசம்பர் 31ல் முடிவடையும் இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏஐ) திட்டத்தை நீட்டிக்க வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்தது'' என்றார்.












Click it and Unblock the Notifications