பாஜகவில் முலாயம்சிங் மருமகள்.. தமிழகம் உட்பட, அரசியலால் அல்லோகலப்பட்ட பெருந்தலைவர்களின் குடும்பங்கள்!
டெல்லி: சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகள் பாஜகவில் இணைந்த கையோடு மாமனாரிடம் ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். அதேநேரத்தில் இந்த விவகாரத்தை ரொம்பவே நல்லது என அசால்ட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறார் முலாயம்சிங் யாதவின் மகனும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ்.
இந்திய அரசியலைப் பொறுத்தவரை குடும்ப அரசியல், வாரிசு அரசியல் காலந்தோறும் இருந்து வருகிறது. அரசியலால் பிரிந்து சிதைந்து போன பெருந்தலைவர்களின் குடும்பங்களும் கூட இருக்கின்றன.
கடந்த வாரம் கூட பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியின் சகோதரர் மனோகர்சிங் கலகக் குரல் எழுப்பி இருந்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் அவர் சுயேட்சையாக போட்டியிடுவேன் என அறிவித்திருக்கிறார். கோவாவில் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகனுக்கு பாஜக சீட் தராத விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி
நாட்டில் அரசியலால் இருதுருவங்களான ராஜீவ்காந்தி-சஞ்சய் காந்தி குடும்பங்கள் மிக முக்கியமானது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய்காந்திதான் முதலில் அரசியலுக்கு வந்தவர். இந்திரா அமல்படுத்திய எமர்ஜென்சி காலத்தில் சஞ்சய் காந்தி ஆடிய ஆட்டங்கள் அதகளம். ஆனால் சஞ்சய் காந்தி விமான விபத்தில் காலமானார். அதன் பின்னர் இந்திரா குடும்பத்தில் இருந்து சஞ்சய் காந்தி குடும்பம் பிரிந்தது. அவரது மனைவி மேனகா காந்தி, மகன் வருண்காந்தி ஆகியோர் பல ஆண்டுகளாக பாஜகவில்தான் இருக்கின்றனர். அண்மையில்தான் வருண்காந்தி பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்திரா படுகொலைக்குப் பின்னர் ராஜீவ்காந்தி பிரதமரானார். அவரது படுகொலைக்குப் பின்னர் மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி இன்றும் காங்கிரஸை வழிநடத்துகிற மேலிடமாக திகழ்கின்றனர்.

பாஜகவில் முலாயம் மருமகள்
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை நிறுவியவர் முலாயம்சிங் யாதவ். 2016-ல் அகிலேஷ் முதல்வராக இருந்த போது அவரது சித்தப்பா சிவபால் யாதவுடன் மோதல் வெடித்தது. சிவபால் யாதவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றினார். இதனால் சிவபால் யாதவ் தனிக்கட்சியே தொடங்கினார். தற்போதைய சட்டசபை தேர்தலில் சிவபால் யாதவ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் அகிலேஷ் யாதவ். முலாயம்சிங் யாதவின் 2-வது மனைவியின் மகன் பிரதீக். அவரது மனைவி அபர்ணா. அபர்ணா 2017 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இப்போது பாஜகவில் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்.

ஹரியானாவில் செளதாலா குடும்பம்
ஹரியானாவில் செளதாலாக்கள் குடும்பம்தான் அரசியலில் நீண்டகாலமாக கோலோச்சி வருகிறது. முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலாவின் பேரன் துஷ்யந்த் செளதாலா, 2018-ல் இந்திய தேசிய லோக் தள் கட்சியில் இருந்து வெளியேறி ஜனநாயக் ஜனதா கட்சி எனும் தனிக்கட்சி தொடங்கினார். இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஹரியானா துணை முதல்வராகவும் இருக்கிறார். ஓம் பிரகாஷ் செளதாலாவின் சகோதரர் 2019-ல் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்றார். ஹரியானா அமைச்சராகவும் அவர் தற்போது பதவி வகிக்கிறார்.

பஞ்சாப் பாதல் குடும்பம்
பஞ்சாப்பில் பாதல் குடும்பம்தான் அரசியலில் பேசுபொருளாக இருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலின் மருமகன், மன்பிரீத் சிங் பாதல் 2010-ல் சிரோமணி அகாலிதளத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் பஞ்சாப் மக்கள் கட்சி எனும் தனிக்கட்சி தொடங்கினார். 2016-ல் அவர் காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டார்.

ராஜஸ்தான் சிந்தியா குடும்பம்
ராஜஸ்தானில் சிந்தியா குடும்பத்தினர் கை அரசியலில் எப்போதும் ஓங்கி இருக்கிறது. ராஜஸ்தான் பாஜகவின் முகமாக பல ஆண்டுகளாக இருந்தவர் விஜயராஜிய சிந்தியா. அவரது மகள் வசுந்தரராஜிய சிந்தியா ராஜஸ்தான் முன்னாள் முதல்வர். ஆனால் வசுந்தரராஜிய சிந்தியாவின் சகோதரர் மாதவராவ் சிந்தியா தொடக்க காலத்தில் ஜனசங்கத்தில் இருந்துவிட்டு பின்னர் காங்கிரஸுக்குப் போனார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். மாதராவ் சிந்தியாவின் மகன் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் பதவி மறுக்கப்பட்டதால் காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவுக்கு தாவினார் ஜோதிராதித்ய சிந்தியா. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்த அவர் இப்போது மத்திய அமைச்சர்.

கருணாநிதி மகன் அழகிரி
தமிழகத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க. அழகிரி இடையேயான மோதல் பல ஆண்டுகளாக விவாதப் பொருளாக இருந்தது. 2014-ல் திமுகவில் இருந்து மு.க.அழகிரி வெளியேற்றப்பட்டார். கருணாநிதி மறையும் வரை அழகிரியால் திமுகவுக்கு திரும்ப முடியவில்லை. கருணாநிதி மறைவுக்குப் பிறகு சில முயற்சிகளை அழகிரி மேற்கொண்டாலும் அது கை கூடவில்லை. சட்டசபை தேர்தலின் போது திமுகவுக்கு எதிராக தனிக்கட்சி தொடங்குவார் அழகிரி என கூறப்பட்டது அது நடக்கவில்லை. தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

சின்ஹா, சரத்பவார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் மூத்த தலைவராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சியில் ஓரம் கட்டப்பட்டதால் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினார். ஆனால் அவரது மகன் ஜெயந்த் சின்ஹா, மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார். இப்போதும் பாஜக எம்.பி.யாகவே இருக்கிறார். மகாராஷ்டிராவில் சரத்பவார் குடும்பம் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது. 2019 சட்டசபை தேர்தல் முடிந்த போது சரத்பவார் குடும்பத்தின் அஜித் பவார் திடீரென பாஜகவுடன் கை கோர்த்து ஆட்சி அமைக்க முயன்றார். துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த முயற்சி கை கூடாமல் போனதால் மீண்டும் தேசியவாத காங்கிரஸுடன் சமாதானமாகிப் போனார்.












Click it and Unblock the Notifications