மோடி பங்கேற்ற சுதந்திர தின விழாவில் ராகுலுக்கு எங்க இடம் ஒதுக்கியிருந்தாங்க தெரியுமா? புது சர்ச்சை!
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு ஒலிம்பிக் வீரர்களுக்கு நடுவே கடைசியில் இருந்து 2-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி செங்கோட்டையில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு நீண்ட உரையாற்றினார். பிரதமர் மோடி தமது உரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன் பொது சிவில் சட்டத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். 2014-ம் ஆண்டு முதல் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இருந்தது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற்றதால் இயல்பாகவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்வரிசையில் மத்திய அமைச்சர்களுக்கு சமமாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு இப்படி முன்வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த முறை முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. முன்வரிசை இடங்களை மத்திய அமைச்சர்கள்தான் ஆக்கிரமித்திருந்தனர். அப்படியானால் ராகுல் எங்கே அமர்ந்திருந்தார்?
செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு நடுவேதான் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது தான் தற்போது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறது.












Click it and Unblock the Notifications