அமலாக்கத்துறை கைது.. டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்! ED பதிலளிக்க உத்தரவு
டெல்லி: அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.

இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒரு சம்மனுக்கு கூட பதிலளிக்கவில்லை. நேரில் ஆஜரானால் கைது உறுதி என்பது தெரிந்த விஷயம்தான். எனவே, ஆஜராவதை தவிர்த்து வந்தார்.
அதே நேரம், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார். அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்ப தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து இன்று புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனையடுத்து கடந்த 21ம் தேதி கையில் கைது வாரண்ட்டுடன் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். இறுதியாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை போன்று கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கீழமை நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தனது மனுவை வாபஸ் பெற்ற கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை மீண்டும் அணுகியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதி ஸ்வர்ன காந்த சர்மா காலை 10.30 மணியளவில் மனுவை விசாரிக்க தொடங்கினார். விசாரணையில் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications