'அந்த மனசு தான் சார் பெருசு'.. நாடாளுமன்றத்தில் பதவியேற்ற பின் நெகிழ வைத்த ராகுல் காந்தி செயல்!
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று ரேபரலி தொகுதி எம்பியாக பதவியேற்றார். அரசியல் சாசன பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! என்றார். அதன்பின்னர் தற்காலிக சபாநாயகருக்கு கை கொடுத்த ராகுல் காந்தி, அதன்பிறகு அவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் பதவியேற்றது. இந்நிலையில் புதிய லோக்சாபா எம்பிக்களின் பதவியேற்கும் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) தொடங்கியது.

முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட 280 பேர் லோக்சபா எம்பிக்கள் உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக லோக்சபா சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள லோக்சபா எம்பிக்கள் இன்று(ஜூன் 25) பதவியேற்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் இன்று தமிழில் எம்பிக்களாக உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டனர். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பதவியேற்றார். அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்ற சசிகாந்த் செந்தில், வாழிய வையகம்! வாழ்க தமிழ்! என்று முழக்கமிட்டார். தலித்- ஆதிவாசிகள்- சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் முழக்கமிட்டார்.
அடுத்தாக பதவியேற்ற வட சென்னை தொகுதி திமுக எம்பி கலாநிதி வீராசாமி, தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன், பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என முழக்கமிட்டார். அதன்பின்னர் பதவியேற்ற தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க தமிழ்நாடு என்று குரல் எழுப்பினார். இப்படி ஒவ்வொரு எம்பியாக இன்று தமிழில் பதவியேற்றனர். சில திமுக எம்பிக்கள் உதயநிதி ஸ்டாலின் வாழ்க என்று கூறி பதவியேற்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரலி தொகுதி எம்பியாக இன்று பதவியேறுக் கொண்டார். அரசியல் சாசன பிரதியை கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். ராகுல் காந்தி பதவியேற்கும்போது, காங்கிரஸ் எம்பிக்களும், கூட்டணி கட்சி எம்பிக்களும் மொத்தமாக கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
தொடர்ந்து எம்பியாக பதவியேற்ற ராகுல் காந்தி தற்காலிக சபாநாயகருக்கு கை கொடுத்தார். பின்ன சபாநாயகரின் அருகில் இருந்த அதிகாரி ஒருவருக்கும் ராகுல் காந்தி கைகொடுத்தார். எம்பிக்கள் எல்லாம் சபாநாயகருக்கு மட்டும் கைகொடுத்து சென்ற நிலையில், ராகுல் காந்தி மட்டும் சபாநாயகர் அருகில் நின்ற அதிகாரிக்கு சம மரியாதை கொடுத்து கைகொடுத்து சென்றது எம்பிக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
